×

முத்துப்பேட்டை பகுதியில் பராமரிப்பின்றி கிடக்கும் குடிநீர் தொட்டியின் அவலம்

முத்துப்பேட்டை, நவ.28: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ்குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் இணைப்புகளுக்கு கொள்ளிடத்திலிருந்து மன்னார்குடி, கோட்டூர், திருப்பத்தூர், மாங்குடி, கடுவெளி, சங்கேந்தி வழியாக எடையூர் சம்புக்கு வந்து பம்பிங் செய்யப்படும் குடிநீர் மெயின் பைப்லைன் வழியாக முத்துப்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி குடிநீர் டேங்குகளை சென்றடைகிறது. பின்னர் அருகிலிருக்கும் ஊராட்சி கிராம பகுதிகளுக்கு பைப்லைன் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அதேபோல் எடையூர் சம்பிலிருந்து பம்பிங் செய்யப்படும் குடிநீர் முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதிக்கு சென்றடைகிறது. இந்நிலையில் தினசரி பம்பிங் செய்யப்படும் குடிநீர் அந்தந்த பகுதிக்கு செல்லும்போது குடிநீரின் பாதிஅளவு குறைந்துவிடுகிறது. இந்த நீர்வரத்து குறைவால் மக்களுக்கு வழங்கும் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக நீண்ட காலமாக முத்துப்பேட்டை பகுதி ஊராட்சி நிர்வாகங்கள கவலையுடன் தெரிவித்து வந்தனர். அதேபோல் இதே பிரச்னையால் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பல்வேறு பகுதி மக்கள் தண்ணீர் லாரி மூலம் குடிநீர் விலைக்கு வாங்கி வருகின்றனர். மேலும் அடிக்கடி இப்பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. அதனை குடிநீர் வாரியமும் உடனுக்குடன் சரி செய்வதில்லை. இதன் மூலம் தினமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. குடிநீர் குழாயில் ஏற்படும் உடைப்பை உடன் சரி செய்யப்படாததால் அப்பகுதியில் தேங்கும் கழிவுநீர் மீண்டும் பின்னோக்கி சென்று குடிநீரில் கலந்து விடுகிறது. இதனால் மக்களுக்கு பல்வேறு வியாதிகள் பரவுவதுடன் சமீபத்தில் முத்துப்பேட்டை பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீரில் மீன் குஞ்சுகள் கூட வந்து பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதி மக்களுக்கு என புதிய பேருந்து நிலையத்தில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் டேங்கும், மஜிதியா தெரு அரசர்குளம் அருகே 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் டேங் என 2 குடிநீர் டேங்குகள் உள்ளது. இதில் இரண்டு குடிநீர் டேங் வளாகமும் பராமரிப்பு இல்லாமல் அசுத்தமாக செடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது. இதில் அரசகுளம் அருகே உள்ள 4 லட்சம் லிட்டர் குடிநீர் டேங் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இதனால் தற்பொழுது டேங்கின் படிக்கட்டுகள் எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதேபோல் மேல் புறம் தடுப்பு சுவர்களும் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது.இதனால் பணியாளர்கள் அச்சம் காரணமாக டேங்கை சுத்தம் செய்தில்லை. இதனால் மாதம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டிய டேங், சுத்தம் செய்து பல வருடங்களாகிறது. இதன் மூலம் பாசி படிந்த தண்ணீர்தான் குழாய்களில் வருகிறது.அதேபோல் தண்ணீர் வந்து விழுந்து டேங்கிற்கு ஏற்றும் சம்புவை சுற்றிலும் கழிவுநீர் வருடக்கணக்கில் தேங்கி கொஞ்சம் கொஞ்சமாக குடிநீரில் கலந்து வருகிறது. அதேபோல் சம்பு மேல் உள்ள குழாய் திறந்து கிடக்கிறது. இதில் பறவைகள் எச்சம் உள்ளே விழுகிறது. அதேபோல் அதில் அப்பகுதிக்கு வரும் சிலர் அதற்குள் கையில் கிடைத்த பொருட்களை போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அதேபோல் தண்ணீர் திறந்து விடப்படும் வால்வு இருக்கும் தொட்டியை முறையாக பராமரிக்காததால் அதிலிருந்து கசிந்து வெளியேறும் தண்ணீர் வருடக்கணக்கில் தொட்டியில் சேர்ந்து புழு பூச்சிகள் நீச்சலடிக்கிறது. இந்த அசுத்தமான தண்ணீரும் குடிநீரில் சுழற்சி முறையில் கலந்து வருகிறது. இந்த குடிநீரை பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகிறது. சமீபத்தில் கூட இப்பகுதியை சேர்ந்த பலருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது.இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பாட்சா கூறுகையில்: முத்துப்பேட்டை நகர மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் மஜிதியா தெரு பகுதியில் அமைந்துள்ள குடிநீர் தொட்டியை சுற்றி நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாததால் புதர்கள் செடி கொடி காடுகள் மண்டி சுகாதரமற்ற நிலையில் கிடக்கிறது. இதேபோல் குடிநீர் தொட்டியில் வால்வுகள் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் மழைநீர் மற்றும் குடிநீர் கழிவுநீராக மாறி நீண்ட நாட்களாக  தேங்கி நிற்பதன் காரணமாக அந்த தண்ணீரில் புழு, பூச்சிகள் உற்பத்தியாகி உள்ளது. இதில் கொசுக்களும் அதிகமாக உற்பத்தியாகி அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பலவித நோய்களுக்கு ஆளாக்கி விடுகிறது, இதைப்போல் மேல்நிலை குடிநீர் தொட்டியில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மூடிகள் திறந்த நிலையில் உள்ளது. இதன் மூலம் பறவைகள் எச்சங்கள் போட்டு குடிநீரில் நச்சு பொருட்கள் கலந்து சுகாதாரமற்ற நிலைமையில் உள்ளது. இவைகளை உடன் சரி செய்யவேண்டும். இதேபோல் குடிநீர் தொட்டியில் இருந்து வெளியேறும் உபரிநீர் சாக்கடை கால்வாய் மூலம் வீணாக செல்கிறது. முன்பு இருந்ததை போன்று அந்த தண்ணீரை அருகிலுள்ள அரசர் குளத்திற்கு சென்று வடியும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்  இதுகுறித்து பேரூராட்சியில் புகார் மனுவும் கொடுத்துள்ளோம். இனியும் தாமதப்படுத்தினால்  விரைவில் மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...