×

கல்லாநேரி குளத்துக்கான வரத்து கால்வாயில் உடைப்பு

உடன்குடி, நவ. 28: கருமேனி ஆற்றில் இருந்து உடன்குடி பகுதி குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் விவசாயிகளே களமிறங்கி சீரமைத்தனர். நெல்லை மாவட்டத்தில் உருவாகும் கருமேனி ஆறு தூத்துக்குடி மாவட்டத்தின் கடைகோடியான மணப்பாடு கடலில் சங்கமிக்கிறது. பொதுவாக கருமேனி ஆற்றில் மழை காலத்தில் பெருக்கெடுக்கும் வெள்ளம், சுப்பராயபுரம் அணைக்கட்டில் இருந்து உடன்குடி பகுதி குளங்களான கல்லாநேரி, புல்லாநேரி, தாங்கைகுளத்திற்கு வந்துசேரும். தற்போது பரவலாக தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் மொட்டைக்கலுங்கு என்ற இடத்தில் கல்லாநேரி குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் கல்லாநேரி குளம் நிரம்பாததோடு புல்லாநேரி, தாங்கைகுளத்திற்கு தண்ணீர் வருவதும் தடைபட்டது. ஆனால், இதை சீரமைக்க அதிகாரிகள் முன்வரவில்லை. இதையடுத்து உடன்குடி வியாபாரிகள் முன்னேற்றச் சங்கத் தலைவர் ரவி, சமூகஆர்வலர் குணசீலன், கருமேனி ஆறு பாதுகாப்பு இயக்கத் தலைவர் அலெக்சாண்டர் மற்றும் தங்கராஜ், வேல்துரை, நடேசன், கணேசன், பிரதீப் உள்ளிட்ட விவசாயிகளும், வியாபாரிகளும் களமிறங்கி சீரமைக்க முடிவு செய்தனர். இதன்படி 150 சாக்கு மூட்டைகளில் மணல் நிரப்பி உடைப்பு ஏற்பட்ட பகுதியில் அடைத்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள மக்கள் இதை வரவேற்று பாராட்டினர்.

Tags : Breakdown ,Kalleneri ,pond ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்