×

தூத்துக்குடி அத்திமரப்பட்டி விலக்கு பகுதியில் திறந்து கிடக்கும் குடிநீர் வால்வு தொட்டியால் ஆபத்து

ஸ்பிக்நகர், நவ.28:தூத்துக்குடி அத்திமரப்பட்டி விலக்கு பகுதியில் மூடி திறந்தநிலையில் காணப்படும் குடிநீர் தொட்டி ஆபத்தான நிலையில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காக வல்லநாடு, வாழவல்லான் பகுதிகளிலிருந்து குழாய்கள் அமைத்து விநியோகம் செய்யப்படுகிறது. அதேபோல தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீர் ஆத்தூர், ஆறுமுகமங்கலம் உள்ளிட்ட பகுதியிலிருந்து குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு நீண்டதூரம் தண்ணீர் கொண்டு செல்லும் போது குழாய்களில் அழுத்தம் காரணமாக வெடிப்பு ஏற்படாமல் இருக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு வால்வுகளின் மூலமாக காற்று வெளியேற்றப்படுகிறது. காற்று வெளியேற்றும் வால்வுகள் உள்ள தொட்டிகள் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையோரத்தில் அமைந்துள்ளன. இந்த தொட்டிகள் மூடியில்லாமலும், மூடி உடைந்த நிலையிலும் காணப்படுகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் மாணவ மாணவிகள், பொதுமக்கள், வியாபாரிகள் கவனத்துடன் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அத்திமரப்பட்டி விலக்கு பகுதியில் உள்ள வால்வு தொட்டியில் மூடிகள் திறந்த நிலையில் உள்ளன. இவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் வேகமாக வரும் வாகனங்களுக்கான சாலையோரத்தில் ஒதுங்கும் போது திறந்து கிடக்கும் வால்வு தொட்டிக்குள் தவறிவிழும் அபாயம் உள்ளது. தற்போது பெய்து வரும் மழைநீரும் தொட்டிக்குள் தேங்கி கொசுக்களின் உற்பத்தி கேந்திரமாக விளங்குகிறது. மேலும் தொற்று நோய்கள் பரவும் சூழல் காணப்படுகிறது. இதேபோல ஆபத்தான நிலையில் உள்ள தொட்டிகளால் அந்த பகுதிகளில் செல்வோர் ஒருவித அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலைஉள்ளது. எனவே, மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கும் முன்பு, மூடிகள் இல்லாத தொட்டிகளுக்கு மூடிபோடவும், திறந்து கிடக்கும் தொட்டிகளை சிமென்ட் சிலாப்புகளை வைத்து மூடவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : opening ,drinking water valve tank ,fig tree barrier area ,Thoothukudi ,
× RELATED சண்முகா கிளினிக்ஸ் திறப்பு விழா