×

கமிஷனர் அலுவலகத்தில் கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனை: குறைந்த விலையால் வரவேற்பு

சென்னை: சிறைக்கைதிகள் தயாரித்த பொருட்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.தமிழகம் முழுவதும் உள்ள புழல், வேலூர், பாளையங்கோட்டை, மதுரை, கடலூர், திருச்சி உள்ளிட்ட 9 மத்திய சிறைகள் உள்ளன. சிறையில் உள்ள தண்டனை கைதிகள் விடுதலை ஆகி வெளியே செல்லும்போது அவர்கள் சுயமாக தொழில் தொடங்கி முன்னேறும் வகையில் சிறைகளில் பல்வேறு கைத்தொழில்கள் தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்படி சிறையில் உள்ள கைதிகள் உற்பத்தி செய்யும் அல்வா, ஊறுகாய், போர்வைகள், சட்டைகள், எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அந்தந்த சிறைகள் முன்பு சிறை துறை சார்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் அரசு அலுவலகங்களிலும் கைதிகள் உற்பத்தி செய்யும் துணி மற்றும் உணவு பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிறை கைதிகள் தயாரித்த துணிகள் மற்றும் உணவு பொருட்கள் நேற்று முன்தினம் முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் சந்தை விலையை காட்டிலும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கைத்தறியால் நெய்யப்பட்ட சட்டைகள் ₹300ம், போர்வைகள் ₹200ம், மரச்செக்கு ஆடப்பட்ட சமையல் எண்ணெய்கள், தேங்காய் எண்ணெய்கள் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் தரமாக உள்ளதால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்கள் விருப்பி வாங்கி வருகின்றனர். இந்த விற்பனை வரும் வெள்ளிக்கிழமை வரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெறும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : commissioner ,prisoners ,office ,
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...