×

காலி மனைகளில் குப்பை, கழிவுநீர் தேக்கம் குடியிருப்புகளுக்கு மத்தியில் கொசு பண்ணை

* வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் „* தவிப்பில் துரைப்பாக்கம் மக்கள்

துரைப்பாக்கம்:  சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 193வது வார்டுக்கு உட்பட்ட துரைப்பாக்கம் போஸ்ட் ஆபீஸ் தெருவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றன. இந்த சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனுடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கொசு தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இங்குள்ள ஒரு குடியிருப்பில் இருந்து கழிவுநீரை அங்குள்ள ஒரு காலி நிலத்தில் விடுவதால் கழிவுநீர் குளம்போல் தேங்கி கொசு உற்பத்தி தொழிற்சாலையாக மாறிவிட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் பகல் மற்றும் இரவு நேரங்களில் கொசு தொல்லை அதிகரித்து, இப்பகுதி மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு  புகார் செய்தனர்.

அதன்பேரில், அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சம்மந்தப்பட்ட இடத்தின் உரிமையாளரை அழைத்து விசாரணை நடத்தினர். ஆனால், அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம், சம்மந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர்கள் அதிகாரிகளை சரிகட்டி  அனுப்பியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சசிகுமார் (34), கிருஷ்ணவேணி (70) இவரது பேரன் கேசவ பிரசாத் (2) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு கடந்த ஒரு வார காலமாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களால்  அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து சாலை மற்றும் காலி மனைகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றவும், பொது இடத்தில் கழிவுநீரை வெளியேற்றும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் அப்பகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்க வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Mosquito farm ,dwellings ,lands ,
× RELATED கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன்...