×

பஸ் மோதியதில் மாற்றுத்திறனாளியான பெண் வியாபாரிக்கு 13 லட்சம் இழப்பீடு : வாகன விபத்து தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சென்னை மாநகர பஸ் மோதி மாற்றுத்திறனாளியான பெண்ணுக்கு 13.29 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை ஜல்லடியன்பேட்டையை சேர்ந்தவர் மீனாட்சி (40). காய்கறி வியாபாரி. கடந்த 2016 அக்டோபர் 4ம் தேதி வியாபாரம் முடிந்து இரவு 11 மணியளவில் வீட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் கண்மூடித்தனமாகவும், சாலை விதிகளை பின்பற்றாமலும் சென்னை மாநகர பஸ் ஒன்று வேகமாக வந்துள்ளது. பின்னர் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் மீனாட்சி சைக்கிளின் பின்புறம் மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து மாற்றுத்திறனாளியானார்.

இந்நிலையில் தனக்கு இழப்பீடு வழங்க கோரி சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் மீனாட்சி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.சுதா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகர பஸ் சரியான பாதையில் சென்றது. சைக்கிளில் சென்ற மனுதாரர் நேராக செல்லாமல் பஸ் முன் விழுந்துள்ளார். எனவே, மனுதாரர் தான் விபத்துக்கு பொறுப்பு என மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து தீர்ப்பளித்த நீதிபதி, மாநகர பஸ் கவனக்குறைவாகவும், கண்மூடித்தனமாகவும் சென்றது தெரிய வந்துள்ளது. விபத்தில் காயமடைந்ததால் மனுதாரர் 68 சதவீதம் மாற்றுத்திறனாளியாக மாறியுள்ளார். எனவே மனுதாரருக்கு இழப்பீடாக ₹13.29 லட்சம் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...