×

அடிப்படை வசதிகள் அனைத்தும் ‘அவுட்’ ஆத்திபட்டி ஊராட்சியில் தனித்தீவான லட்சுமி நகர்


அருப்புக்கோட்டை, நவ. 27:  அருப்புக்கோட்டை அருகே, ஆத்திப்பட்டி ஊராட்சியில் உள்ள லட்சுமி நகர் பொதுமக்கள் அடிப்படை வசதியின்றி அவதிப்படுகின்றனர். இதற்காக பொதுமக்கள் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு எடுத்தபோது, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அதிகாரிகள் காலக்கெடு முடிந்தும் கண்டுகொள்ள வில்லை என புகார் எழுந்துள்ளது. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஆத்திப்பட்டி கிராம ஊராட்சியில் லெட்சுமி நகர் உள்ளது. இங்கு 200க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நகர் உருவாகி 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்டு தனித்தீவு போல லட்சுமி நகர் உள்ளது. சாலை வசதி மோசம்:லட்சுமி நகரில் உள்ள பிரதான சாலை குண்டும், குழியுமாக உள்ளது. பொதுமக்கள் நடந்து செல்லவும், டூவீலர் ஓட்டிச் செல்வதற்கும் சிரமப்படுகின்றனர். பிரதான சாலையும், 5 குறுக்கு தெருக்களும் மண் சாலையாக உள்ளது. மழை காலங்களில் அவைகள் சேறும் சகதியுமாக மாறுகிறது. பிரதான சாலையில் உள்ள வாறுகால் இடிந்து கிடக்கிறது. இதனால், கழிவுநீர் செல்லாமல் தேங்குகிறது. இதில், கொசுக்கள் உருவாகி குடியிருப்புவாசிகளை பதம் பார்க்கிறது.
தூர்வாரப்படாத ஓடை:   

திருச்சுழி ரோடு, மெயின்ரோட்டில் இருந்து லட்சுமி நகர் வழியாக வாகைக்குளம் கண்மாய்க்கு செல்லும் பிரதான ஓடை 35 அடி அகலமுடையது. இந்த ஓடையை தூர்வாராமல் உள்ளனர். மேலும், ஆக்கிரமிப்பால் ஓடையின் அகலம் குறைந்துள்ளது. இதில் முட்செடிகள் முளைத்து புதர்மண்டிக் கிடக்கிறது. மழை காலங்களில் மழைநீர் செல்ல முடியாமல் நகருக்குள் செல்கிறது. ஓடையிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இந்த ஓடையில் மழைநீர் செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்.

போர்வெல் மோட்டார் பழுது:
நகரின் மையப்பகுதியில் போர்வெல் போட்டு குடிநீர் தொட்டி அமைத்துள்ளனர். இந்த தொட்டியிலிருந்து துக்க காரியங்களுக்கு தண்ணீர் எடுத்து பயன்படுத்தினர். தற்போது மின்மோட்டார் பழுதால், குடிநீர் தொட்டியும், போர்வெல்லும் பயனில்லாமல் உள்ளது. துக்க காரியங்களுக்கு லாரி தண்ணீர் வாங்கி பயன்படுத்துகின்றனர். பழுதான மின்மோட்டாரை சீரமைக்க வேண்டும். மின்பவர் பம்ப் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வாரம் ஒருமுறை குடிநீர் விநியோகம்: ஊராட்சி மூலம் வாரம் ஒருமுறை லட்சுமி நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீரை குடிக்க முடியாமல் மற்ற புழக்கத்திற்கு  பயன்படுத்துகின்றனர். குடிப்பதற்காக ஒரு குடம் நீரை ரூ.12க்கு விலைக்கு வாங்குகின்றனர். இப்பகுதிக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

குப்பைத் தொட்டி இல்லை:
நகரில் குப்பைத்தொட்டிகள் இல்லை. தெருக்களின் ஓரங்களில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, 15 இடங்களில் குப்பை தொட்டி வைக்க வேண்டும் என்கின்றனர்.
போதிய தெருவிளக்குகள் இல்லை: நகரில் 15 ஆண்டுகளுக்கு முன் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. புதிதாக எதுவும் அமைக்கப்படவில்லை. பெரும்பாலான தெருக்கள் இரவு நேரங்களில் இருளில் மூழ்குகின்றன. பொதுமக்கள் திருட்டு பயத்தில் செல்ல வேண்டியுள்ளது. எனவே, லட்சுமி நகரில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து லட்சுமி நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் வீரபத்திரபோஸ் ஆகியோர் கூறுகையில், ‘நகரில் 10 ஆண்டுகளுக்கு முன் தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. சாலை, வாறுகால், பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கடந்த பிப்ரவரியில் குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டம் அறிவித்தோம். அப்போது வந்த அதிகாரிகள், 6 மாத காலத்திற்குள் செய்து தருவதாக உறுதி அளித்தனர். சாலை அமைப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு அளந்து சென்றனர். ஆனால், அதிகாரிகள் உறுதியளித்த காலக்கெடு முடிந்தும், இதுவரை நடவடிக்கை இல்லை’ என்றனர்.

Tags : Lakshmi Nagar ,Athipatti ,
× RELATED வேலூரில் போலீசார் அதிரடி வீடுகளில் தொடர் கைவரிசை காட்டிய 3 பேர் கைது