×

அமாவாசை வழிபாட்டுக்காக சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி நூறு, நூறு பேராக அனுப்பி வைத்தனர்

வத்திராயிருப்பு, நவ. 27:  மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷம் அமாவாசையை முன்னிட்டு இன்று வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், மலைப்பகுதியில் தொடர் மழை பெய்ததால், அனுமதி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அமாவாசையையொட்டி நேற்று  நூற்றுக்கானக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டில் குவிந்தனர். அவர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என வனத்துறையிடமும், போலீசாரிடமும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து சுமார் 8 மணியளவில் தாணிப்பாறை வனத்துறை கேட் திறக்கப்பட்டு நூறு, நூறு பேராக அனுப்பி வைத்தனர். பக்தர்கள் தாணிப்பாறை வழுக்கல் பாறை அருவியில் குளித்துவிட்டு கோயிலுக்குச் சென்றனர். அமாவாசையை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடந்தது. பின் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று சுமார் 2500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் விஸ்வநாத் செய்திருந்தார். கோயில் மாடு குத்தி பக்தர் காயம்: நேற்று சதுரகிரி கோயிலுக்குச் சென்று திரும்பிய சக்திகிரிதர் (32) என்னும் பக்தரை கோயில் காளை மாடு, வலது பக்க தொடையில் குத்தி கிழித்தது. இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின், மதுரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Tags : Hundreds ,devotees ,
× RELATED வன்முறை குறித்த 2 வழக்குகளில் இம்ரான் கான் விடுவிப்பு