×

ரோட்டில் கடை விரிப்பதால் டிராபிக்ஜாம் திருப்புவனம் வாரச்சந்தைக்கு நிரந்தர இடம் ஒதுக்க வேண்டும்

திருப்புவனம், நவ.27: திருப்புவனம் வாரச்சந்தை நடத்துவதற்கு நிரந்தரமாக மாற்று இடம் வழங்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர். திருப்புவனத்தில் 20 வருடங்களாக மட்டை ஊருணியில் வாரச்சந்தை நடத்தப்பட்டு வந்தது. ஊருணி வரத்துக் கால்வாய் தூர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டதால் நீர் வரத்து இல்லை. இதனால் ஊருணி  குப்பை கொட்டும் இடமாக மாறியது. இதன் விளைவாக ஊருணி மேடாகியது. கடந்த 20 ஆண்டுகளாக அந்த இடத்தில் செவ்வாய்க்கிழமை ஆடு, கோழி, காய்கறி சந்தையும், புதன்கிழமை மாட்டு சந்தையும் நடந்து வந்தது. அண்மையில் ஊருணி, ஏரி, கண்மாய், குளங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும். நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் ஆணை வழங்கியது. அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் மட்டை ஊருணி ஆக்கிரமிப்பை அகற்றி ஊருணியை ஆழப்படுத்த நடவடிக்கை எடுத்தார். வைகை ஆற்றிலிருந்து ஊருணிக்கு தண்ணீர் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதனால் வாரச் சந்தை சேதுபதி நகர் எதிரில் உள்ள அரசு இடத்தில் கடந்த சில வாரங்கள் நடந்தது. கடந்த செப்டம்பர் மாதம்  சிலர் அப்பகுதியில் சந்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் தடை பெற்று விட்டனர். அதனால் சந்தை நடத்த மாற்று இடம் இல்லாததால் வாரச்சந்தையை பேரூராட்சி நிர்வாகம் ரத்து செய்துவிட்டது. ஆனாலும் வாரச்சந்தை வியாபாரிகள் பேரூராட்சி அனுமதியின்றி சிவகங்கை செல்லும் ரோட்டின் ஓரத்தில் கடை விரித்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இப்பகுதியில் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தனியார் பள்ளிகள் உட்பட 5 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளுக்கு செல்லும் சாலையின் நடுவில் கடந்த சில மாதங்களாக வாரச்சந்தை நடப்பதால் மாணவ, மாணவிகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்ல முடியாத அவலநிலை நீடித்து வருகிறது. அரசு ஆண்கள் பள்ளியில் நேற்று நூற்றுக்கணக்கான ஆடுகளை குவித்து விட்டனர். நிரந்தரமாக வாரச்சந்தை நடத்த மாற்று இடம் உடனடியாக வழங்க வேண்டும். அதுவரை சாலையோரத்தில் வியாபாரம் நடத்துவதை தடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : shop ,road ,Tropicjam Thiruvananthapuram ,
× RELATED சென்னை-கொல்கத்தா தேசிய...