×

கொடைக்கானல் சாலைகளை முற்றுகையிடும் மாடுகள் போக்குவரத்திற்கு அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது

கொடைக்கானல், நவ. 27: கொடைக்கானல் சாலைகளில் திரியும் மாடுகளால் போக்குவரத்திற்கு அடிக்கடி இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் நடந்து வருகின்றன. கொடைக்கானல் நகர் சாலைகளில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கொடைக்கானலின் பிரதான சாலைகளான நாயுடுபுரம், அண்ணாசாலை, லாஸ்காட் சாலையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட மாடுகள் முகாமிட்டு மாட்டுத்தொழுவமாக மாற்றியுள்ளது. இதனால் போக்குவரத்திற்கு அடிக்கடி இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியான வத்தலக்குண்டு சாலையில் மாடு ஒன்று வாகனத்தில் அடிபட்டு போக்குவரத்து தடைபட்டது.

இதேபோல் பஸ் ஒன்று மோதியதில் மாடு பஸ்சின் அடியில் சிக்கி பெரிய விபத்து ஏற்பட்டது. இதனால் டிரைவரை திட்டி தீர்த்த பொதுமக்கள் பஸ்சை சிறிதுநேரம் சிறைபிடித்தும் வைத்தனர். முன்பு மாடுகள் சாலையில் திரிந்தால் அதை நகராட்சி அதிகாரிகள் பிடித்து தொழுவத்தில் அடைத்து சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு அபராதம் விதித்து மாட்டினை விடுவிப்பர். ஆனால் தற்போது இந்த நடைமுறை இல்லையேன தெரிகிறது. இதனாலே மாட்டின் உரிமையாளர்கள் தங்கள் இஷ்டம் போல் மாடுகளை சாலைகளில் திரிய விட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். எனவே கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் சாலையில் திரிய விடப்படும் மாடுகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kodaikanal Road ,
× RELATED கொடைக்கானல் சாலையில் அந்தரத்தில் தொங்கிய பஸ்: 30 பயணிகள் தப்பினர்