×

வேட்டம்பாடி ஏரியில் கழிவுநீர் கலப்பு

நாமக்கல், நவ.27: வேட்டம்பாடி ஏரியில் அதிகப்படியான கழிவுநீர் கலப்பால் தண்ணீர் மாசடைந்து மீன்கள் செத்து மிதக்கிறது. நாமக்கல் அருகேயுள்ளது வேட்டம்பாடி. இங்கு பெரிய ஏரி அமைந்துள்ளது. கடந்த இரண்டு மாதமாக நாமக்கல் பகுதியில் அவ்வப்போது பெய்த மழை மற்றும் கொல்லிமலை கருவாட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இருப்பினும் ஏரியின் பல பகுதிகள் முட்புதராக காட்சி அளிக்கிறது. மேலும் ஏரியில் கழிவுநீர் அதிகமாக கலக்கிறது. நாமக்கல் நகரில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கொசவம்பட்டி ஏரியில் கலந்து, அங்கிருந்து வேட்டம்பாடி ஏரியிலும் கலந்து வருகிறது.

இதன் காரணமாக தற்போது ஏரியில் தண்ணீர் மாசடைந்து மீன்கள் அதிக அளவில் செத்து மிதக்கிறது. ஏரியின் அருகாமையிலேயே ஊர் அமைந்துள்ளது. இதனால் அங்குள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால், சுகாதார கேடு ஏற்படுகிறது. வேட்டம்பாடி ஊராட்சி நிர்வாகத்திடம் இது பற்றி அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பல ஆண்டாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.நேற்று ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்து சென்றனர்.

Tags : Vettambadi Lake ,
× RELATED கனமழை பெய்ய வாய்ப்பு