×

தா.பேட்டையில் புறவழிச்சாலையை யார் சீரமைப்பது?

தா.பேட்டை, நவ.27: தா.பேட்டையில் புறவழிச்சாலையை யார் சீரமைப்பது என்பதில் பேரூராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினருக்கும் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. தா.பேட்டை புறவழிச்சாலை மிகவும் சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு உகந்த நிலையில் இல்லாமல் இருப்பதால் அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் இல்லையெனில் நாற்று நடும் போராட்டம் நடத்தப்போவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருந்த செய்தி கடந்த 25ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இந்நிலையில் தற்போது தா.பேட்டையில் உள்ள புறவழிச் சாலையை யார் சீரமைப்பு செய்வது என்ற கருத்து போட்டி தா.பேட்டை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினருக்கு இடையே ஏற்பட்டுள்ளது.

தா.பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள புறவழிச்சாலை மிகுந்த மோசமாக உள்ளது. தா.பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிற்கு உள்ள இச்சாலை வழியாக துறையூரில் இருந்து வரும் கனரக வாகனங்கள் மேட்டுப்பாளையம், கரிகாலி, எரகுடி, திருமனூர், துறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிறது. மேலும் பேருந்துகள், லோடு ஆட்டோக்கள், பயணிகள் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் ஆகியவை அதிக அளவு பயணிக்கின்றன. தற்போது சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் வாகனங்களில் அதிக பழுது ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் தற்போது தா.பேட்டை கடைவீதியில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வழியாக மேட்டுப்பாளையத்தில் பேருந்துகள் செல்கிறது. இதனால் மிகுந்த நெருக்கடியும் பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்படுகிறது.

எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் இது தொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியான நிலையில் நெடுஞ்சாலைத்துறை முசிறி உதவி கோட்ட பொறியாளர் மனோகரன், தா.பேட்டை இளநிலை பொறியாளர் சுரேஷ்சந்திரன் ஆகியோர் தா.பேட்டையில் உள்ள புறவழிச்சாலை நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் வரவில்லை. பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே தா.பேட்டை பேரூராட்சி நிர்வாகம் அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

அதே வேளை தா.பேட்டை செயல் அலுவலர் அசோகன் கூறுகையில், தா.பேட்டை புறவழிச் சாலையை நெடுஞ்சாலைத் துறைக்கு முறையாக எழுதி கொடுத்தாகிவிட்டது. இது தொடர்பான கோப்புகள் பேரூராட்சி இயக்கத்தின் மூலம் நெடுஞ்சாலை துறை உயர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. அந்த கோப்புகளை முசிறி கோட்ட நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் கேட்டு பெறவில்லை என கருதுகிறேன். சீரமைப்பு பணிகளை நெடுஞ்சாலை துறையினரே மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறும்போது, மோசமான புறவழிச் சாலையை சீரமைப்பதில் இருதுறை சார்ந்த அலுவலர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. எனவே கனரக வாகனங்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி திருச்சி கலெக்டர் உடனடியாக தா.பேட்டை புறவழிச் சாலையை யார் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை அறிவுறுத்தி ஒரு ஆணை பிறப்பிக்க வேண்டும். சாலை பராமரிப்பு பணிகள் விரைவில் தொடங்காவிட்டால் பொதுமக்களுடன் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று கூறினர்.

Tags :
× RELATED திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் 8,283...