×

தொழி்ல் மையம் மூலம் செயல்படுத்தப்படும் வங்கி கடன் உதவி திட்டங்கள் தாந்தோணிமலை அரசு கல்லூரியில் நாளை விழிப்புணர்வு முகாம்

கரூர், நவ. 27: கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கத்துடனும் மாவட்ட தொழில் மையம் மூலமாக மூன்று வங்கி கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் படித்த முதல் தலைமுறை இளைஞர்கள் சுயதொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் வகையில் 2012- 13ம் ஆண்டு முதல் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. பயனாளிகள் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு, பட்டய படிப்பு, ஐடிஐ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் ரூ. 5 கோடி வரை வங்கிக் கடன் பெற்று தொழில் துவங்கினால் 25 சதவீதம் மானியம் மற்றும் 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம்:
சமுதாயத்தில் பின்தங்கி உள்ளவர்களை முன்னேற்ற, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த திட்டம் மூலம் வியாபாரம் மற்றும் சேவை திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ. 5 லட்சமும், உற்பத்தி திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சமும் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம்:
மத்திய அரசின் பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ. 25 லட்சமும், சேவை தொழில்களுக்கு ரூ. 10 லட்சம் வரையிலும் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத மானியமும், கிராமப்புறங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பில் 35 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற அனைத்து இளைஞர்களையும் குறிப்பிட்ட மூன்று கடன் திட்டங்களில் விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நாளை(28ம் தேதி) காலை 10 மணியளவில் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. கரூர் மாவட்டத்தில் சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ள இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Bank Loan Assistance Schemes ,Labor Center ,
× RELATED மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த...