×

காக்களூர் வீட்டுவசதிவாரிய குடியிருப்பில் கால்வாய் ஆக்கிரமிப்பால் வீடுகளை சூழ்ந்த மழைநீர்: தொற்று நோய் பரவும் அபாயம்

திருவள்ளூர், நவ. 27: காக்களூர் ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்புகளால், வீடுகளை சுற்றிலும் மழைநீர் பல நாட்களாக தேங்கி கிடக்கிறது. இதனால், அப்பகுதி மக்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட அய்யனார் அவெனியூவில் இருந்து எல்ஐசி, செயின்ட் ஆன்ஸ் பள்ளி, தலைமை அரசு மருத்துவமனை, ஆர்.எம் ஜெயின் மெட்ரிக் பள்ளி, ஜெ.ஜெ.சாலை வழியாக பொதுப்பணித்துறையின் மழைநீர் கால்வாய் காக்களூர் ஏரிக்கு செல்கிறது.
இதேபோல், காக்களூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்தும் காக்களூர் ஏரிக்கு செல்லும் வகையில் கால்வாய் உள்ளது. தற்போது இக்கால்வாயை சிலர் ஆக்கிரமித்து வீடுகளை காட்டியுள்ளனர்.

இதனால், காக்களூர் அப்பாசாமி சாலை அருகே, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வீடுகளை சுற்றிலும் பல நாட்களாக மழைநீர் தேங்கி கிடக்கிறது. மேலும், அதில் ஏடிஎஸ் கொசுக்கள் முட்டையிட்டு உற்பத்தியாகி வருகிறது. மாலை 6 மணிக்கு மேல் அவ்வழியாக செல்பவர்கள் அனைவரையும் கொசுக்கள் கடித்து துரத்துகிறது. இதனால், அப்பகுதி மக்கள் எங்கே டெங்கு, மலேரியா, யானைக்கால் வியாதி போன்ற நோய்கள் ஏற்படுமோ என அச்சத்துடன் உள்ளனர். மேலும், மாலை 6 மணிக்கு மேல் அனைத்து வீடுகளின் கதவுகள், ஜன்னல்களையும் கொசுக்களுக்கு பயந்து அடைத்து விடுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி, சீராக காக்களூர் ஏரிக்கு மழைநீர் செல்லும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்’’ என்றனர்.

Tags : homes ,
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...