×

கார்த்திகை தீப அகல் விளக்கு செய்ய ஏரிகளில் இருந்து சவுடு மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்: மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை, நவ. 27:  கார்த்திகை தீபத்திற்காக அகல் விளக்கு மற்றும் மண்பாண்டம் செய்வதற்கு ஏரிகளில் இருந்து சவுடுமண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.           
வருகின்ற டிசம்பர் மாதம்  10ம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடைபெறவுள்ளது. இந்த நாளில் பெண்கள் தங்களின் வீடுகளில் விரதம் இருந்து, அகல் விளக்குகள்  ஏற்றி வழிபடுவார்கள். இந்நிலையில், பெரியபாளையம் அருகே அகரம், தண்டலம், ஊத்துக்கோட்டை அருகே  புதுக்குப்பம், பாலவாக்கம்,  உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் கார்த்திகை தீபத்திற்காக அகல் விளக்குகள் தயார் செய்யும் பணியில் மும்முரமாக  ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:
டிசம்பர் மாதம் கார்த்திகை தீப திருவிழா நடைபெறவுள்ளதால், அதற்காக  அகல் விளக்கு தயார் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறோம். இந்த அகல் விளக்குகளை சென்னை, திருவள்ளூர் மற்றும் ஆந்திர மாநில பகுதிகளில் இருந்து வருபவர்கள் ஒரு ரூபாய் முதல்  15  ரூபாய் வரை கொடுத்து வாங்கிச்செல்வார்கள். மேலும், மற்ற நாட்களில் பானை, அடுப்பு ஆகியவைகள்  செய்வோம். அதற்கு எங்களுக்கு ஏரிகளில் இருந்து சவுடு மண் எடுக்க  அரசு அனுமதி தரவேண்டும். மேலும், எங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய மானிய தொகை 3 ஆண்டுகளாகியும் இதுவரை வழங்கவில்லை. அந்த தொகையையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Karthik Deepa ,lakes ,pottery workers ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5...