×

பட்டாபிராம் மார்க்கெட்டில் மீன் கழிவுகளால் சுகாதார சீர்கேடு: அதிகாரிகள் அலட்சியம்

ஆவடி, நவ. 27: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டாபிராம் மீன் மார்க்கெட் பல ஆண்டாக பராமரிப்பின்றி கிடப்பதாலும், கழிவுகளை அள்ளாததாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.   ஆவடி பட்டாபிராம், தண்டுரை, பிள்ளையார் கோயில் தெருவில் மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட் கடந்த 2002ம் ஆண்டு ஆவடி நகராட்சி சார்பில் ₹22 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இங்குள்ள 58 கடைகளில் மீன், கருவாடு மற்றும் காய்கறிகள் விற்பனை நடந்து வருகிறது. இந்த மார்க்கெட்டில் ஆவடி, பட்டாபிராம், சோராஞ்சேரி, சித்துக்காடு, அன்னம்பேடு,  கருணாகரசேரி, மிட்டின்மல்லி, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மக்கள் பயனடைந்து வருகின்றனர். இங்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், ஞாயிறு  உள்ளிட்ட விடுமுறை நாட்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் வந்து செல்கின்றனர்.

ஆனால், இந்த மார்க்கெட்டில் எவ்வித பராமரிப்பு இன்றி சேதம் அடைந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பட்டாபிராம் மீன் மார்க்கெட்டில் சேரும் கழிவுகள் வெளியே சாலை ஓரத்தில் கொட்டப்படுகின்றன. இந்த கழிவுகளை நகராட்சி நிர்வாகம் முறையாக அப்புறப்படுத்துவது இல்லை. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அந்த சாலையில் வருபவர்கள் மூக்கை பொத்தி கொண்டு நடந்து செல்கின்றனர். மேலும், மார்க்கெட்டை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளும் தூர்நாற்றத்தினால் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், மார்ட்கெட்டில் இருந்து கழிவுநீர் செல்ல முறையான கால்வாய் வசதி இல்லை. இதனால் மார்க்கெட்டில் உட்பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2002ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மாக்கெட் முறையாக பாராமரிப்பு இன்றி இருப்பதால் கடைகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. குறிப்பாக ஷட்டர்கள், தரைதளம் உடைந்து கிடக்கிறது. இதனால் வியாபாரிகள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடிவதில்லை. மேலும், இங்குள்ள மின் வயர்கள் ஆங்காங்கே தாழ்வாக தொங்கியும்,  பழுதடைந்தும் கிடக்கிறது.

இதனால் பொதுமக்கள் ஆபத்தான முறையில் வந்து செல்கின்றனர். கடந்த இரு  ஆண்டுக்கு முன்பு இந்த மார்க்கெட்டில் மின்கசிவால்  ஏற்பட்ட தீ விபத்தில் 5 கடைகள் எரிந்து சேதமானது. மேலும் மார்க்கெட் வெளியே சாலையை ஆக்கிரமித்து மீன் வெட்டி வருகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகின்றன. இதுகுறித்து பலமுறை வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் பொதுமக்கள் வியாபாரிகளும் சுகாதார சீர்கேட்டால் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, ஆவடி மாநகராட்சி நிர்வாகம் பட்டாபிராம் மார்க்கெட்டை முறையாக பராமரிக்கவும், மீன் கழிவுகளை தினமும் அகற்றி சுகாதாரத்தை பேணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags :
× RELATED தனியார் தொழிற்சாலையில் இருந்து...