×

மாமல்லபுரம் பேரூராட்சியில் மழைநீர் குளமாக மாறிய பூஞ்சேரி சிறுவர்கள் பூங்கா:  தொற்று நோய் பரவும் அபாயம்  கண்டு கொள்ளாத அதிகாரிகள்

மாமல்லபுரம், நவ. 27: மாமல்லபுரம் பேரூராட்சியில் உள்ள, பூஞ்சேரி சிறுவர் பூங்காவில், மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மாமல்லபுரம் பேரூராட்சி பூஞ்சேரியில் சிறுவர்களுக்கான பூங்கா உள்ளது. பேரூராட்சி சார்பில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த பூங்காவை, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கவில்லை. இதனல், அங்கு அடர்ந்த முட்செடிகள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது.

அடர்ந்த செடிகளில் இருந்து பாம்பு, தேள், பூரான் உள்பட பல்வேறு விஷப்பூச்சிகள் அதிகரித்துள்ளன. இதனால், பூங்காவில் சிறுவர்கள் சென்று விளையாடுவதை தவிர்க்கின்றனர். மேலும், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், பூங்காவில் மழைநீர் தேங்கி, குளம்போல் காட்சியளிக்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி, சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்த பூங்காவில் அடர்ந்துள்ள முட்செடி, கொடி மற்றும் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சார்பில் பலமுறை பேருராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர் என புகார் எழுந்துள்ளது. எனவே, உடனடியாக பேரூராட்சி நிர்வாகம், பூங்காவில் உள்ள அடர்ந்த முட்செடிகளையும், தேங்கியுள்ள மழைநீரையும் அகற்றி சுத்தம் செய்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : boys ,park ,Mamallapuram Peruratchchi ,
× RELATED 5 வயது சிறுமியை நாய்கள் கடித்ததன்...