×

உத்திரமேரூரில் பரபரப்பு சாலையை துண்டித்து நீதிமன்றம் கட்டுவதற்கு எதிர்ப்பு: பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

உத்திரமேரூர், நவ. 27: உத்திரமேரூர் அருகே மண் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது. உத்திரமேரூர் அடுத்த வேடபாளையத்தில் இருந்து பூந்தண்டலம், பென்னலூர் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் 2 கிமீ தூரத்துக்கு மண் சாலை உள்ளது. இங்குள்ள விவசாயிகள் வேடபாளையத்தில் உள்ள வேளாண் அலுவலகத்தில் விவசாய பொருட்களை வாங்கி வர, இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

வேடபாளையம் அருகே மண்சாலையையொட்டி, நீதிமன்றம் கட்ட 2 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கியுள்ளது. இதனால், இந்த மண் சாலையை துண்டித்து, மாற்று வழியாக சென்றுவரும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அந்த மாற்று சாலை, சரிவர அமைக்கவில்லை.
இதனால் மேனலூர், காட்டுப்பாக்கம் வழியாக 10 கிமீ தூரம் சுற்றி வேடபாளையத்துக்கு கிராம மக்கள் செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.  இதுகுறித்து கிராம மக்கள் பல்வேறு அதிகாரிகளுக்கு தொடர்ந்து கடந்த 6 மாதமாக பல்வேறு புகார்கள் அளித்தனர். ஆனால், இதுவரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், 2 கிமீ தூரமுள்ள மண்சாலையை சீரமைக்க கோரி உத்திரமேரூர் - வந்தவாசி சாலையில் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது மாட்டு வண்டிகளை சாலையின் குறுக்கே நிறுத்தினர். இதனால், அவ்வழியாக சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. கடும் போக்குவரத்து ஏற்பட்டது. இதையொட்டி அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : court blocking ,road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி