×

கர்ப்பிணிகள் வர தயக்கம் சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர், பணியாளர்கள் பற்றாக்குறை

சுரண்டை, நவ. 27:  சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிலவும் மருத்துவர், பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள், பெண்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி  பகுதியில் சுமார் 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். சுரண்டையை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக  சுரண்டைக்கு தினமும் வந்து செல்கின்றனர். இங்கு ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் தினமும் சுமார் 400 பேர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதே போல் இங்கு சராசரியாக 6 முதல் 12 பிரசவம் நடைபெற்று வருகிறது. இருப்பினும் இங்கு நிலவும்  மருத்துவர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.  தற்போது ஒரேயொரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு உதவியாளர் மட்டும் பணிபுரிகின்றனர். மருந்தாளுநர் பணியிடம் காலியாகவே இருந்து வருகிறது. இதுபோன்ற சூழலால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரே மருத்துவரே அனைத்து நோயாளிகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பரிசோதித்து மருந்து வழங்குவது என்பது இயலாத காரியமாகும். இதனால் சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 ஏற்கனவே இங்கு பணியில் இருக்கக்கூடிய ஒரு மருத்துவர் டெபுடேசனில் பாவூர்சத்திரத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் ஒரே ஒரு ஆண் மருத்துவர் மட்டுமே உள்ளதால்  நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக பெண் மருத்துவர் இல்லாமல் கர்ப்பிணி பெண்கள் மிகுந்த அவஸ்தைக்குள்ளாகிறார்கள். இங்கு  பெண் மருத்துவர் இல்லாததால் அதிகமான கர்ப்பிணி பெண்கள் இங்கு பிரசவம் பார்ப்பதை தவிர்க்கின்றனர். எனவே தென்காசி புதிய ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்கவும், காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடத்திற்கு பணியாளரை நியமிக்கவும், குறிப்பாக பெண் டாக்டரை பணியில் அமர்த்தி தேவையான அளவிற்கு தாதியர்கள் மற்றும் உதவியாளர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே போன்று இங்கு சித்த மருத்துவப் பிரிவு செயல்பட்டு வருகின்றது. அதில் தினமும் 120க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்துகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு நீராவி குளியல் மிஷின், உடற்பயிற்சிக்கான சைக்கிள், தொக்கனம், இன்ஹேலர்,  மற்றும் பல்வேறு வசதிகள் இருந்தும் ஒரு மருத்துவரும் ஒரு உதவியாளர் மட்டும்தான் பணிபுரிந்து வருகின்றார் மருந்தாளுனர் இல்லை. ஆகவே மருந்தாளருக்கான பணியையும் மருத்துவரும் உதவியாளரும் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் மருந்துகளை வழங்குவதிலும் சிக்கல் இருக்கிறது.தென்காசி மாவட்டத்தின் முக்கிய நகரமான சுரண்டை பகுதி மக்களின் மருத்துவ வசதியை கருத்தில் கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்கவும் சுரண்டை சித்த மருத்துவ பிரிவுக்கு மருந்தாளுநரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

புரியாத புதிர்
வளர்ந்து வரும் நகரமான சுரண்டையானது, மருத்துவமனைகளுக்கு புகழ் பெற்றது. இருப்பினும் இங்கு 24 மணி நேர மருத்துவமனை இல்லை. ஒரு சில தனியார் மருத்துவமனைகளைத் தவிர்த்து பெரும்பாலான மருத்துவமனைகளில் இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரை மருத்துவர்கள் இருப்பதில்லை. மேலும் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு பொது மக்கள் தென்காசி அல்லது நெல்லைக்கு செல்லவேண்டி உள்ளது. இதனால் சில நேரம் உயிர் இழப்பு ஏற்படுகிறது. எனவே சுரண்டை அரசு மருத்துவமனையை 24 மணி நேர மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் கடந்த 2010ம் ஆண்டு மருத்துவமனையை தரம் உயர்த்த அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இன்று வரை அதற்கான பணிகள் துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

Tags : doctors ,health center ,
× RELATED ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு