×

பெண்ணை தாக்கிய தீட்சிதரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


புவனகிரி, நவ. 27:  சிதம்பரம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்த லதா என்ற பெண் பக்தர் கடந்த 16ம் தேதி சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றார். முக்குறுணி விநாயகர் சன்னதியில் பூஜையில் இருந்த தர்ஷன் தீட்சிதர் லதாவை  தாக்கினார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீசார், தீட்சிதர் தர்ஷன் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் கைது செய்யவில்லை. இதையடுத்து தீட்சிதர் தர்ஷன் தலைமறைவானார். அவரைப் பிடிக்க காவல்துறை சார்பில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சென்னை சென்று அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.பெண்ணை தாக்கிய தீட்சிதரை கைது செய்யாத காவல்துறைக்கும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இதைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதை கண்டித்து நேற்று முன்தினம் சிதம்பரம் காந்தி சிலை அருகில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலூர் மாவட்ட தலைவர் அறிவழகி தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் வளர்மதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடலூர் மாவட்ட செயலாளர் மணிவாசகம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேகர் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின்போது பெண்கள் தீட்சிதருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர். இந்த போரட்டம் குறித்து இந்திய மாதர் சம்மேளன மாநில துணை செயலாளர் வளர்மதி நிருபர்களிடம் கூறியதாவது: தீட்சிதர் தர்ஷனை காவல்துறை உடனடியாக கைது செய்யாவிட்டால் இந்த போராட்டத்தை மாநிலம் தழுவிய போராட்டமாக மாநில அளவில் நடத்த திட்டமிட்டுள்ளோம் என கூறினார்.

Tags : arrest ,Dikshitar ,
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!