×

அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட இலவசமாக இடம் கொடுத்தும் இன்னும் பணிகள் நடைபெறவில்லை

உளுந்தூர்பேட்டை, நவ. 27:   உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எம்.குண்ணத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அரசு உயர்நிலைப்பள்ளியாக இருந்த இந்த பள்ளி கடந்த ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து பதினோறாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் எம்.குண்ணத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு என போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மரத்தடியிலும், வகுப்பு அறைகளின் வெளிப்பகுதியிலும் உட்கார்ந்து கல்வி பயின்று வருகின்றனர். மழை காலங்களில் போதிய இட வசதி இன்றி இந்த மேல்நிலைகல்வி பயிலும் மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதனை தொடர்ந்து மாணவர்களின் நலன்கருதி கடந்த 6 மாதத்திற்கு முன்னர் இதே கிராமத்தை சேர்ந்த சடையன் மற்றும் ஏழுமலை ஆகிய இரண்டு பேரும் தங்களது சொந்த அனுபவத்தில் இருந்த 73 சென்ட் இடத்தினை பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்காக இலவசமாக வழங்கினார்கள்.

 இதற்கான இந்த இடத்தினை பத்திரப்பதிவு செய்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இடம் வழங்கி 6 மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரையில் பள்ளி கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான எந்த அடிப்படை பணிகளும் அதிகாரிகள் இதுவரையில் எடுக்கவில்லை என எம்.குண்ணத்தூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மாணவர்களின் மேல்நிலைக்கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருவதாகவும், மேலும் வருகிற பொதுத்தேர்வின் போது தேர்ச்சி சதவிகிதம் குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் இடம் இருந்தால் உடனடியாக கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்படும் என தெரிவித்த கல்வித்துறை அதிகாரிகள் இடம் கொடுத்து 6 மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரையில் இதற்கான ஆரம்ப கட்ட அடிப்படை பணிகள் கூட செய்யாதது மாணவர்கள் மத்தியில் மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
 இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுத்து எம்.குண்ணத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : classroom ,government school ,
× RELATED கலைத்திறன் போட்டிகளில் மாவட்ட அளவில்...