×

ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க கோரி பொதுமக்கள், அரசியல் கட்சியினர் போராட்டம்

ரிஷிவந்தியம், நவ. 27:  தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக 2 ஆக பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் என கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் என 2 வருவாய்  கோட்டமும், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், சின்னசேலம், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் மற்றும் புதியதாக கல்வராயன்மலை ஆகிய தாலுகாக்கள் இணைத்துள்ளனர். இந்த நிலையில் சங்கராபுரம் தாலுகாவில் 37 லட்சத்து 6460 பேர் கொண்ட மக்கள் தொகையும், 11 லட்சத்து 876 குடும்ப அட்டைகளும் உள்ளன. சங்கராபுரம் வட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 53 கிராம ஊராட்சிகள் உள்பட 100க்கும் மேற்பட்ட குக்கிராமம் உள்ளன. ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் முழுக்க முழுக்க விவசாய தொழில் பிரதானமாக உள்ளது. இதில் காப்பு காடுகள் அதிக அளவில் உள்ளன. மேலும் வானம் பார்த்த பூமியாக நிலங்களில் பயிர் செய்து வருகின்றனர்.

 ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் மிக பழமை வாய்ந்த ரிஷிவந்தியம் அர்த்தநாதீஸ்வரர் ஆலயமும், ஆதி திருவரங்கத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரங்கநாத பெருமாள் ஆலயமும் உள்ளன. ரிஷிவந்தியம் சுற்று வட்டாரத்தில் உள்ள பொது மக்கள் வருவாய் சார்ந்த முதியோர் உதவித் தொகை, பட்டா மாற்றம், நில அளவை, சாதி, வருமானம், இருப்பிடம், குடும்ப அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள, புதுப்பிக்க, புதிய குடும்ப அட்டை மற்றும் சான்றுகள் பெற சங்கராபுரத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது. சங்கராபுரம் வட்டத்தில் கடைசி கிராமமான பிரிவிடையாம்பட்டு, மண்டகப்பாடி, வெங்கலம், முட்டியம், பாசார், அரியந்தக்கா  உள்ளிட்ட கிராமத்தை சார்ந்தவர்கள் சங்கராபுரம் செல்ல வேண்டுமானால் தியாகதுருகம்- கள்ளக்குறிச்சி வழியாக சங்கராபுரம் செல்ல வேண்டும். அதேபோல் கள்ளிப்பாடி, திருவரங்கம், ஜம்படை, கரையாம்பாளையம், எடுத்தனூர், சீர்பனந்தல்  உள்ளிட்ட கிராமங்கள் சங்கராபுரம் செல்ல வேண்டுமானால் பகண்டை கூட்டு சாலை வழியாக சங்கராபுரம் செல்ல வேண்டும். இதனால் கால நேரமும், பண விரயமும் செலவாகிறது. போதிய பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
 இதனால் ரிஷிவந்தியத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் அரசு அறிவிக்காதது ரிஷிவந்தியம் பகுதி மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதையடுத்து ரிஷிவந்தியம் தலைமையிடமாக கொண்டு ரிஷிவந்தியம் அருகில் உள்ள மக்கள் 1 கிலோமீட்டர் சென்றால் திருக்கோவிலூர் தாலுகா வருகிறது இதை திருத்தி அரசு அமைக்க வேண்டும் என நினைத்திருந்தால் ரிஷிவந்தியம் தலைமையிடமாகக் கொண்டு திருக்கோவிலூர் தாலுகாவில் உள்ள 20 கிராமங்களும், சங்கராபுரம் தாலுகாவில் 25 கிராமங்களும், தியாகதுருகம் பகுதியில் 15 கிராமங்களும் இணைத்து புதிய தாலுகா அமைக்க வேண்டுமென அனைத்து கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் ரிஷிவந்தியத்தில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் இதயத்துல்லா தலைமை வகித்தார். ஊர் பிரமுகர்கள் வெங்கடேசன், சம்பத்குமார், ஊமத்துரை, வேல்முருகன், மாரிமுத்து, கண்ணன், சத்யராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அதிமுக பிச்சைக்காரன், திமுக கண்ணன், சிவமுருகன், அமுமுக அமுதமொழி, இந்திய கம்யூனிஸ்ட் ராஜா, ஆறுமுகம், விசிக வேலுமணி, அனைத்து விவசாயிகள் முற்போக்கு சங்கம் ஜாயின்ஷா, கோவிந்தன், காங்கிரஸ் சுந்தரமூர்த்தி, இளங்கோவன், கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குமார் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : parties ,headquarters ,taluk ,Risivandhiyam ,
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...