×

காலை, மாலை, மதிய உணவு நேரங்களில் மாணவர்கள் போதுமான அளவு குடிநீர் அருந்துவதை உறுதிப்படுத்த வேண்டும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு

வேலூர், நவ.27:காலை, மாலை சிறு இடைவேளை மற்றும் மதிய உணவு நேரங்களில் மாணவர்கள் போதுமான அளவு குடிநீர் அருந்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் குழந்தைகள் தின விழாவில், மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த அவகாசம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.எனவே காலை, மாலை சிறு இடைவேளை மற்றும் மதிய உணவு நேரங்களில் மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த அறிவுரை வழங்கவும், அதை ஆசிரியர்கள் மேற்பார்வையிட்டு அறிவுறுத்த முதன்மைக்கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தண்ணீர் அருந்துவதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி அறியாமல் இருப்பதன் காரணமாகவே பெரும்பாலான மாணவர்கள் போதுமான தண்ணீர் அருந்துவதில்லை. ஆகவே போதுமான அளவு தண்ணீர் அருந்துவதன் காரணமாக அவர்களது உடல் நல்ல ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும் என மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பல்வேறு விதமான நோய்கள் எவ்வாறு தடுக்கப்படுகின்றன என்பதையும் தெரிவித்தால், அவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள்.மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 8 டம்ளர் தண்ணீர் போதுமானதாக இருக்கலாம். ஆனால் மாணவர்கள் பள்ளிக்கு பயணம் மேற்கொள்வது, விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் அதிக அளவு தண்ணீர் அருந்துவது நல்லது. இவ்வாறு தண்ணீர் அருந்துவதன் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.

அதாவது, தண்ணீரானது உடலின் வெப்பத்தை சீராக வைக்கும். உடலில் தண்ணீர் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்களை சுமந்து செல்வதோடு கழிவுகளையும் வெளியேற்றும். உடலில் மெட்டபாலிசம் எனப்படும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது, போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால் தசைகளில் பிடிப்பு அதிகரிக்கும். அவற்றை வெளியேற்ற தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. தண்ணீர் குடலியக்கத்தை சீராக வைப்பதால் மலச்சிக்கல் தவிர்க்கப்படும். மேலும் சிறுநீர்பாதை தொற்று குறையும்.எனவே, அனைத்து அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து வகையான பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் மாவட்டக்கல்வி அலுவலர்கள், உதவி வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

Tags : school department ,teachers ,lunch ,
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...