விவசாயிகளுக்கு ஆலோசனை தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்காக 29ம் தேதி பாலாலயம்

தஞ்சை, நவ. 27: தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகத்திற்காக தயாராகி வருகிறது. வரும் 29ம் தேதி பாலாலயத்துக்காக 4 கால யாகசாலை பூஜை துவங்க உள்ளதையடுத்து கட்டுமான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மாமன்னன் ராஜராஜசோழன் தஞ்சையில் பெரிய கோயிலை கட்டி கி.பி.1010ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்தார். அதன்பிறகு நாயக்கர், மராட்டிய மன்னர்களும் பல்வேறு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்தனர். தற்போது இக்கோயில் உலக புகழ் பெற்று விளங்குகிறது. யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக தஞ்சை பெரிய கோயிலை அறிவித்து பெருமை சேர்த்துள்ளது.1996ம் ஆண்டு கடைசியாக கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டது. இந்நிலையில் பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வைத்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 23 ஆண்டுகளுக்கு பிறகு 2020ம் ஆண்டு பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதனால் இந்திய தொல்லியல்துறை பராமரிப்பில் உள்ள இக்கோயிலில் அம்பாள் சன்னதி, நடராஜர் சன்னதி, விநாயகர், முருகன் சன்னதி, சுற்றுச்சுவர், மூலவர் சன்னதி, கேரளாந்தகன் நுழைவு வாயில் மற்றும் கோபுரங்கள் தூய்மைப்படுத்தும் பணி, புல்வெளி சீரமைப்பு, கல்தளம் பதிக்கும் பணி, கோயில் வளாகத்தில் சிதிலமடைந்த தரைதளம் சீரமைக்கும் பணி, திருச்சுற்று மண்டபங்கள் சீரமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் விமானகோபுரம் சுத்தப்படுத்தும் பணி கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு தற்போது முடிக்கப்பட்டது.இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகத்துக்காக பாலாலய யாகசாலை அமைக்க கடந்த 15ம் தேதி ஈசானிய மூலையில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

வரும் 29ம் தேதி 4 கால யாகசாலை பூஜை துவங்கி டிசம்பர் 2ம் தேதி பாலாலயம் நடக்கிறது. இதற்காக தஞ்சை பெரியகோயில் நடராஜர் சன்னதி அருகே தகரப்பந்தல் போடப்பட்டு யாகசாலை அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. செங்கற்களை கொண்டு கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. டிசம்பர் 2ம் தேதி பாலாலயம் துவங்கிய பிறகு கும்பாபிஷேகம் நடைபெறும் வரை கோயிலில் மூலவர் பெருவுடையார், அம்பாள், பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு திரைப்போடப்பட்டு விடும். அங்கு வழிபாடுகள் நடைபெறாது. அனைத்து விதமான பூஜைகள், வழிபாடுகள் எல்லாம் நடராஜர் மண்டபத்தில் உள்ள உற்சவ சுவாமிகளுக்கு மட்டுமே நடைபெறும். கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் தான் மூலவர் பெருவுடையார் உள்ளிட்ட சுவாமிகளுக்கு வழிபாடுகள் நடத்தப்படவுள்ளது.


Tags : ceremony ,Farmers On ,Tanjay Periya Temple ,
× RELATED மக்களின் அடிப்படை தேவைகளில் கவனம்...