×

தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக பயறுவகை பயிரிட்டால் வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம்

பட்டுக்கோட்டை, நவ. 27: தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக பயறுவகை பயிரிட்டால் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளலாம் என்று விவசாயிளுக்கு கண்டுணர்வு சுற்றுலாவில் ஆலோசனை வழங்கப்பட்டது.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாரம் வேளாண்மைத்துறையின்கீழ் செயல்படும் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தில் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்துக்கு 50 விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலாவாக அழைத்து செல்லப்பட்டனர். வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் கார்த்திகேயன் பங்கேற்று கஜா புயலால் தென்னை மரங்கள் பெருமளவு விழுந்ததற்கு முக்கிய காரணம் தென்னங்கன்றுகளை மேலாக நடவு செய்ததால் தான். இதை தவிர்க்க புதிதாக தென்னங்கன்றுகளை நடவு செய்யும்போது 3 அடிக்கு 3 அடி ஆழ அகலத்தில் குழி அமைத்து நட வேண்டும்.புயலால் விழுந்த மரங்களை விவசாயிகள் ஆங்காங்கே போட்டு வைத்ததால் சிவப்பு கூன்வண்டு மற்றும் காண்டாமிருக வண்டு அதிகளவில் உற்பத்தியாகி தென்னை மரங்களுக்கு அதிக சேதத்தை விளைவிப்பதால் இனக்கவர்ச்சி பொறிகளை பயன்படுத்தி அவற்றை ககர்ந்து அழிக்கலாம் என்றார். வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய உழவியல்துறை பேராசிரியர் மாரிமுத்து பேசுகையில், தென்னை மரத்துக்கு ஓராண்டுக்கு தழைச்சத்து 1.300 கிலோ, மணிச்சத்து 2 கிலோ, சாம்பல்சத்து 2 கிலோ, தொழு உரம் 50 கிலோ, போராக்ஸ் 50 கிராம், ஜிப்சம் 1 கிலோ மற்றும் மேங்கனீஸ் சல்பேட் 500 கிராம் இட வேண்டும். உரமிடும்போது தென்னை மரத்தின் அடிபாகத்திலிருந்து 6 அடி துhரத்தில் அரைவட்ட வடிவில் ஒரு அடி ஆழம் கொண்ட பள்ளம் தோண்டி உரமிட்டு அதை மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஓராண்டுக்கு தேவையான உரங்களை இரண்டாக பிரித்து ஜூன்- ஜூலை மாதத்தில் ஒருமுறையும் டிசம்பர்- ஜனவரி மாதத்தில் ஒருமுறையும் இடலாம்.

தென்னை மரத்தின் அடிப்பகுதியில் மரத்தை சுற்றி 50 கிராம் சணப்பை விதைத்து பூக்கும் தருணத்தில் அதை மடக்கி மண்ணில் மட்க செய்வதன் மூலம் மரத்துக்கு தேவையான தளைச்சத்து பெறலாம். முதல் 5 ஆண்டுகளில் ஊடுபயிராக பயறுவகை, எண்ணெய்வித்து பயிர்கள், காய்கறிகள் மற்றும் வாழை பயிரிடுவதால் விவசாயிகள் தென்னைமரம் காய்ப்புக்கு வரும் வரையில் வருமானம் பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளலாம் என்றார்.பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சங்கீதா பங்கேற்று விவசாயிகளிடம் இப்பயிற்சியை பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். பட்டுக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த 50 விவசாயிகளை ஒருங்கிணைத்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகிதா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் மற்றும் ரவி ஆகியோர் அழைத்து சென்றனர். தென்னை ஒட்டுப்பணி மையம் பார்வதி நன்றி கூறினார்.

Tags :
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா