கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி முகப்பில் சிதிலமடைந்து வரும் வரலாற்றை சித்தரிக்கும் சிற்பங்கள் விரைந்து சீரமைக்க வலியுறுத்தல்

கும்பகோணம், நவ. 27: கும்பகோணம் அரசு ஆடவர் கலைக்கல்லூரி நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள வரலாற்றை சித்தரிக்கும் சிற்பங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதை விரைந்து சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தென்னகத்தின் கேம்ப்ட்ரிஜ் என அழைக்கப்படும் கும்பகோணம் அரசு ஆடவர் கலைக்கல்லூரி 150 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. கச்சேரி சாலைக்கும், கல்லூரிக்கும் இடையே காவிரி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றை கடந்து செல்ல மரப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மரப்பாலம் சிதிலமடைந்ததால் 2009ம் ஆண்டு கான்கிரீட்டால் புதிய பாலம் அமைக்கப்பட்டது.அப்போது பாலத்தின் நுழைவுவாயில் அருகே இருசக்கர வாகன பாதுகாப்பிடமும், அதன் எதிரே கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் சிற்பமும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த சிற்பத்தில் இதே கல்லூரியில் படித்த கணிதமேதை ராமானுஜன் சிற்பம் மற்றும் இந்த கல்லூரியில் படித்து உயர்ந்த இடத்தை பிடித்தவர்களின் உருவங்கள் மற்றும் மனிதனின் நாகரீக வளர்ச்யான குரங்கிலிருந்து மனிதன் உருவான கதை, புத்தகங்கள், ஆதி எழுத்துகள், பட்டம் பெறும் மாணவர்கள், உயர் படிப்பு குறித்து சுதையால் புடைப்பு சிற்பங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.இந்த சிற்பங்கள் தற்போது ஆங்காங்கே உடைந்து காணப்படுகிறது. எனவே பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய இந்த சிற்பங்களை மீண்டும் சீரமைக்க வேண்டும். முகப்பில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் மற்றும் இரும்பினாலான பெயா்களை உடனே அமைக்க வேண்டுமென கல்லூரி நிர்வாகத்துக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பாண்டியன் என்பவர் கூறுகையில், கும்பகோணம் அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் கணிதமேதை ராமானுஜா், சில்வா் டங் சீனிவாச சாஸ்திரிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் படித்து இந்தியா மட்டுமில்லாமல் உலகளவில் பெயரை பெற்றுள்ளனர். மேலும் இங்கு படித்தவர்களில் பல பேர் அமைச்சர்களாகவும், எம்பிக்களாகவும் இருந்துள்ளனா். தமிழ் திரைத்துறை பல இயக்குனர்களை உருவாக்கியுள்ளது. கல்லூரியில் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பராமரிப்பு இல்லாமல் கல்லூரியில் வெளியில் உள்ள பெயர்களும், விளக்குகளும் உடைக்கப்பட்டு அவலநிலையில் உள்ளது. மேலும் புதிதாக அமைத்த இந்த புடைப்பு சிற்பங்கள் சில நாட்களிலிலேயே உடைந்துள்ளதால் அதை பார்ப்பதற்கே பரிதாப நிலை ஏற்படுகிறது.ஆனால் சிற்பம் செய்தபோது தரமானதாக பொருட்களை கொண்டு செய்யாததால் அத்தனை சிற்பங்களும் உடைந்துள்ளது. கணிதமேதை ராமானுஜா் இந்த கல்லூரியில் படித்தும், கணித ஆசிரியராகவும் பணியாற்றினார். அவரது நினைவாக அவரது உருவமும் சிற்பத்தில் உள்ளது. ஆனால் அவரது பிறந்த நாளன்று ஏராளமானார் விழாக்களையும், அவரது நினைவாக பல விருதுகளையும், அவரது உருவ சிலைக்கு மரியாதையும் செய்கின்றனர். ஆனால் அவரது சிற்பங்கள் உருக்குலைந்து காணப்படுவது அவர்களுக்கு தெரியாதது வேதனையளிக்கிறது. மேலும் இந்த முகப்பின் முன்பு இரும்பினாலான பெயா்கள், மின்விளக்குகள் என இருந்தது. ஆனால் போதுமான பாதுகாப்பு இல்லாததால் அனைத்து திருட்டுபோய் விட்டது.இந்த கல்லூரியில் 150க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உள்ளனர். அவா்கள் தினம்தோறும் பார்வையிட்டு சீர் செய்திருந்தால் இதுபோன்ற அவலநிலை இருந்திருக்காது. மேலும் இந்த புடைப்பு சிற்பங்கள் உடைந்து பல மாதங்களாக அப்படியே இருக்கிறது. ஆனால் எந்த அதிகாரியோ, பள்ளி முதல்வரோ, பேராசிரியா–்களோ கண்டுகொள்ளாதது வேடிக்கையாக உள்ளது. எனவே கும்பகோணத்தில் உள்ள தென்னகத்தின் கேம்பிரிட்ஜ் என்றழைக்கப்படும் அரசு ஆடவா் கல்லூரி முகப்பில் உள்ள சிற்பங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories:

>