மோசடியில் ஈடுபட்ட பெண் மீது நடவடிக்கை கோரி தூத்துக்குடி எஸ்பி அலுவலகம் முற்றுகை

தூத்துக்குடி, நவ.27: தூத்துக்குடி சக்தி விநாயகர்புரம், சத்யாநகர், கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் திரண்டு வந்து எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அங்கிருந்த போலீசாரின் அறிவுறுத்தலின்படி அவர்கள் கோரிக்கை மனுவை எஸ்பி அலுவலகத்தில் அளித்து சென்றனர்.  அவர்கள் அளித்துள்ள மனுவில்: நாங்கள் சக்தி விநாயகர்புரம் மற்றும் சுற்று பகுதிகளில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஆனந்தலெட்சுமி என்பவர் சுயஉதவி குழுக்களை நடத்தி வந்தார். நாங்கள் 40க்கும் மேற்பட்டவர்கள் அவரது குழுக்களில் இணைந்து செயல்பட்டு வந்தோம். அவர், முதலில் எங்களுக்கு தனித்தனியே கடன்களை பெற்று தந்தார். நாங்களும் கடனை திரும்ப செலுத்தினோம். இதனால் எங்களின் முக்கிய ஆவணங்கள் அவரிடம் இருந்தன. இதனை பயன்படுத்தி அவர் 25க்கும் மேற்பட்டவர்கள் பெயரில் சுமார் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1.25 லட்சம் வரையில் மோசடியாக கடன் பெற்றுள்ளார்.இதனையறிந்த நாங்கள் அவரை தேடி சென்றபோது அவர் குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். எங்கள் பெயரில் உள்ள கடனுக்காக சம்பந்தபட்ட நிறுவனத்தினர் எங்களை மிரட்டி வருகின்றனர். எனவே எங்கள் பெயரில் மோசடியாக கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டவர்களையும், எங்களை மிரட்டும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>