இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, நவ.27: தூத்துக்குடியில் இலவச வீட்டுமனைப்பட்டா கோரி தாலுகா அலுவலகத்தில் பெருந்திரளாக மனு அளிக்கும் போராட்டம் நடந்தது.தமிழக அரசு சமீபத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க அரசாணை பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் பல ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். ஆகையால் அரசாணையின்படி ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் சார்பில் நேற்று மாவட்டம் முழுவதும் 10 தாலுகா அலுவலகங்களிலும் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. தூத்துக்குடியிலும் தாலுகா அலுவலகத்தில் நடந்த மனு கொடுக்கும் போராட்டத்திற்கு  மாநகர செயலாளர் ராஜா தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சங்கரன், புறநகர் செயலாளர் ராஜா முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் அர்ச்சுனன் கோரிக்கை விளக்கி பேசினார். போராட்டத்தில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.கோவில்பட்டி: கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நகர செயலாளர் ஜோதிபாசு தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன்  முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா பேசினார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள்  கிருஷ்ணவேணி, ராமசுப்பு, விஜயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் துணை தாசில்தார் ராமகிருஷ்ணனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.  

ஓட்டப்பிடாரம்:    ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான  சண்முகராஜ் தலைமை வகித்தார். இதில் மாவட்ட ஒன்றியக்குழு உறுப்பினர் மொட்டையசாமி, கணேசன், செல்வம், மாரியப்பன், தட்சிணாமூர்த்தி, பழனிசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் முரளி கஸ்தூரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் ஓய்வு தொகை, தகுதியானவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் மனு வழங்கினர்.  

எட்டயபுரம்: எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கட்சி எட்டயபுரம் தாலுகா குழு உறுப்பினர் செல்வக்குமார் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ரவீந்திரன் போராட்டத்தை விளக்கி பேசினார். தாலுகா குழு உறுப்பினர்கள் நடராஜன், பாலமுருகன், ராஜப்பா, வைரமாலா, முருகேசன், முத்தழகு, கிளை செயலாளர்கள் மூக்கையா, மாணிக்கவாசகம்,  வெள்ளைச்சாமி, கருப்பசாமி படர்ந்தபுளி சித்ரா, மீனாட்சிசுந்தரம், பூமாலை, மாரியம்மாள், குருவம்மாள் உட்பட ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். கோரிக்கை மனுவை மண்டலத் துணை தாசில்தாரிடம் கொடுத்துவிட்டு  கலைந்து சென்றனர்.

வைகுண்டம்: வைகுண்டம்  தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி  ஒன்றிய செயலாளர் நம்பிராஜன் தலைமை வகித்தார். கருங்குளம்  ஒன்றிய செயலாளர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு  உறுப்பினர் ஆறுமுகம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொறுப்பாளர்கள் வைகுண்டம் ராமலிங்கம், கருங்குளம் மணி உள்பட  70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களிடம் தலைமையிடத்து துணைத்தாசில்தார்  சசிகுமார் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.சாத்தான்குளம்:  சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த மனு கொடுக்கும் போராட்டத்துக்கு  மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர்  ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்பாத்துரை, கிளைச்செயலாளர் கிருஷ்ணன்  முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், முருகன், விசிக ஒன்றிய செயலாளர் ஜெயராமன், துணை செயலாளர் சுந்தர்  பேசினர். தொடர்ந்து  சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணைதாசில்தார் நிகேதா பிரபாவதியிடம் மனுக்களை கொடுத்தனர். ஒன்றிய குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Related Stories:

>