×

சட்டநாதர் கோயில் எதிரே குளம்போல் தேங்கிய மழைநீர் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் முகம் சுழிப்பு

சீர்காழி, நவ.27:சீர்காழி சட்டநாதர் கோயில் எதிரே குளம்போல் மழைநீர் தேங்கி கிடப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சீர்காழி நகர மையப்பகுதியில் சட்டநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருநிலை நாயகி பிரம்மபுரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். மேலும் காசிக்கு இணையான அஷ்டபைரவர் தனி சன்னதியில் எழுந்தருளி உள்ளனர். இக்கோயிலில் அமைந்துள்ள பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு பார்வதி அம்பாள் ஞானப்பால் வழங்கிய தலமாகும். இத்தகைய புகழ்வாய்ந்த கோயிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் கோயிலின் தெற்கு கோபுர வாசல் எதிரே மழைநீர் குளம் போல் பல நாட்களாக தேங்கி நிற்கிறது.

 இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலையோரம் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்லும்போது மழைநீர் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தெரிக்கிறது. இதனால் பக்தர்கள் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் கோயிலுக்கு தரிசனம் செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் கோயிலுக்கு முன் தேங்கியுள்ள தண்ணீரால் முகம் சுழிந்தபடி கோயிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். புனிதமான இடமருகே துர்நாற்றம் வீசுவதால் அச்சத்துடன் சுவாமியை தரிசனம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே மாதக்கணக்கில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Pilgrims ,Chattanathar Temple ,
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்