×

நாகை புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறான தரைகடைகள் அகற்றம்

நாகை, நவ.27: தினகரன் செய்தி எதிரொலியால் நாகை புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறாக நடைபாதையில் போடப்பட்டுள்ள கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் 24 மணி நேரமும் பயணிகள் வந்து செல்லும் பகுதியாக மாறியுள்ளது. இதற்கு காரணம் நாகையை சுற்றி ஏராளமான சுற்றுலா தலங்கள் அமைந்து உள்ளது. ஆனால் நாகை புதிய பஸ்ஸ்டாண்டை பார்த்தால் சுற்றுலா பயணிகள் முகம்சுழிக்கு அளவிற்கு மிகவும் மோசமாக உள்ளது. எந்த நேரமும் மன நோயாளிகள், பிச்சைகாரர்கள் என்று தொல்லை ஒருபுறம் உள்ளது. அதே நேரத்தில் பயணிகள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டுள்ளது. நடைபாதையில் பயணிகள் நடந்து சென்றால் கடைபோட்டுள்ளவர்கள் ஏன் இந்த வழியாக நடந்து வருகிறீர்கள் என்று கேட்பதுடன் பயணிகளை தகாதவார்த்தைகளில் திட்டுகின்றனர். இதனால் பயணிகளுக்கும் தரைகடை வியாபாரிகளுக்கும் சில நேரங்களில் சண்டைகள் ஏற்படுகிறது.

பயணிகள் பஸ்சில் இருந்து தங்களது உடமைகள், குழந்தைகள் ஆகியவற்றோடு இறங்கி சற்று இளைப்பாறலாம் என்று நினைத்தால் நடைபாதையில் கடைகள் போட்டுள்ளவர்கள் ஏன் இங்கு வந்து நிற்கிறீர்கள் என்று கேட்டு பயணிகளிடம் சண்டை வளர்ப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் பயணிகள் நடைபாதையில் செல்வதற்கே அச்சம் அடைந்து பஸ்கள் வரும் பாதையில் நடந்து செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே பயணிகள் நலன் கருதி நாகை நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். அதே நேரத்தில் மீண்டும் அப்பகுதியில் கடைகள் வராத வகையில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக முன்பதிவு அறை அருகே தாய்மார்கள் பாலுட்டும் அறை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் திறக்கப்பட்டது.

ஆனால் அந்த அறை இன்று பூட்டியே கிடக்கிறது. இதற்கு காரணம் அந்த அறையின் எதிரே போடப்பட்டுள்ள இருக்கைகள் மறைமுகமாக இருப்பதால் சமூகவிரோதிகள் அமர்ந்து கொண்டு மது அருந்து என்று சில செயல்களில் ஈடுபடுவதால் தாய்மார்கள் பயத்தில் அந்த அறைக்கு செல்வதே இல்லை. இதனால் அந்த அறை எந்த நேரமும் பூட்டியே கிடக்கிறது என்று கடந்த 25ம் தேதி தினகரன் நாளிதழில் படம் மற்றும் செய்தி வெளிவந்தது. இதையடுத்து நாகை நகராட்சி அதிகாரிகள் நேற்று(26ம் தேதி) அதிரடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும் தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறந்து சுத்தம் செய்தனர்.

Tags : passengers ,Naga New Bus Stand ,
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...