×

₹2.35 கோடியில் உதயகிரி கோட்டை புனரமைப்பு டிலெனாய் நினைவிடம் சீரமைக்கப்படுகிறது

தக்கலை,  நவ. 27:  தக்கலை அருகே உள்ள உதயகிரி கோட்டை மற்றும் டிலெனாய் நினைவிடம்  தொல்லியல் துறையால் ₹2.35 கோடியில் புனரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. தக்கலை  அருகே புலியூர்குறிச்சியில் உதயகிரி கோட்டை அமைந்துள்ளது. இந்த கோட்டை  வளாகத்தில் டச்சு தளபதியான டிலெனாய் நினைவிடமும் உள்ளது. திருவிதாங்கூரின்  வேணாட்டு மன்னர் மார்த்தாண்ட வர்மா ஆட்சியின் போது 1741 ல் குளச்சல் போர்  நடந்தது. குளச்சல் துறைமுகத்தை கைப்பற்ற நடந்த போரில் டச்சுப்படையின்  தளபதியாக இருந்தவர் ஹாலந்தில் பிறந்த டிலெனாய். இப்போரில் டச்சுப்படையை  மன்னர் மார்த்தாண்ட வர்மா முறியடித்தார். இதனால் டிலெனாய் உள்ளிட்ட டச்சு  வீரர்கள் பிடிபட்டு உதயகிரி கோட்டை வளாகத்தில் சிறை வைக்கப்பட்டனர். இந்த  உதயகிரி கோட்டை 98 ஏக்கர் பரப்பளவுடையது. சுமார் 3.5 கி.மீட்டர்  சுற்றளவு கொண்ட கோட்டைச்சுவரும் உண்டு. 30 அடி உயரம் கொண்ட இந்த  கோட்டைச்சுவரில் பல இடங்களில் பிள்ளைக்கோட்டையும் உள்ளது. இதில் இருந்து  துப்பாக்கி மற்றும் பீரங்கிகளை வைத்து எதிரிகளை கண்காணித்தனர். உதயகிரி  கோட்டை வெடி மருந்துகள் தயாரிக்கும் இடமாகவும், எதிரிகளை கைது செய்து  அடைத்து வைக்கும் இடமாகவும் மார்த்தாண்ட வர்மா காலத்தில் விளங்கியது.

இதனிடையே  சிறை பிடிக்கப்பட்ட டிலெனாயின்  வீரமும், திறமையும் மன்னரை  கவர்ந்தது. இதனால் மன்னர் டிலெனாயை தனது படைத்தளபதியாக நியமித்தார்.  டிலெனாய் பீரங்கிகள், வெடிமருந்துகள் தயாரித்து  திருவிதாங்கூர் படையை  நவீனமாக்கினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தை குமரி முதல் கொச்சி வரை  விரிவடைய செய்தார். இப்படி திருவிதாங்கூர் மன்னருக்கு விசுவாசமாக இருந்த  டிலெனாய் 1777ல் காலமானார். டிலெனாய் மற்றும் அவரது குடும்பத்தினருடைய  கல்லறைகள் உதயகிரி கோட்டை வளாகத்தில் உள்ளது. டச்சு படை தளபதியாக  படையை நவீனமாக்கியதுடன் திருவிதாங்கூர் மன்னருக்கு  விசுவாசமாக இருந்த டிலெனாய் நினைவிடம் மற்றும் உதயகிரி கோட்டைச்சுவர் தமிழக  தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வரலாற்றின் பக்கங்களில் இடம் பெற்ற  டிலெனாய் நினைவிடத்தை வெளிநாட்டு பயணிகள் பலர் பார்த்து செல்வதுண்டு.  இத்தகைய பெருமை வாய்ந்த டிலெனாய் நினைவிடம், கோட்டைகள் பாழடையத்  தொடங்கியது. டிலெனாய் நினைவிடம் போதிய பராமரிப்பின்றி காணப்பட்டது.  நினைவிடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் புற்கள் நிறைந்து மறைந்து  போகும் அளவில் காணப்பட்டது.

 ஓகியின் போது மரங்கள் விழுந்ததாலும், கற்கள் பெயர்ந்ததாலும்  கோட்டைச்சுவரில் பல இடங்களில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கியது. குமரி  மாவட்டத்தில் உள்ள வரலாற்று சின்னங்கள் பல அழியும் நிலைக்கு சென்றது. இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று  ஆய்வாளர்கள்  தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக  தினகரனில் பல முறை செய்தி வெளியிடப்பட்டு அரசின் கவனத்துக்கு கொண்டு  செல்லப்பட்டது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன் 3 கோடியில் புனரமைக்க  திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் பணிகள்  திட்டமிடுவதில் தொய்வு ஏற்பட்டது. எனினும் தொல்லியல் அதிகாரிகள் மதுரையில்  இருந்து அடிக்கடி வந்து மதிப்பீடுகளை தயார் செய்து பணி ஒதுக்கீடு ஆணையும்  வழங்கினர். இதன் படி ₹2.35 கோடியில் கோட்டைச்சுவர், டிலெனாய்  நினைவிடம் புனரமைக்கப்படுகிறது. தமிழக அரசன் தொல்லியல் துறை ஆசிய வளர்ச்சி  வங்கி நிதியில் இருந்து இப்பணியை செய்கிறது. இதற்கான பணிகள் கடந்த ஒரு  வாரத்துக்கு முன் தொடங்கியது. பணிகளை மத்திய தொல்லியல் துறையின்  நிபுணர்களான பொறியாளர்கள் ஆர்.மணி, பி. வாசுதேவன், மற்றும் பொறியாளர்கள்  செல்வராஜ், வளவன் உள்ளிட்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்து ஆலோசனைகள்  வழங்கினர். இந்த பணிகளை 6 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : Udayagiri Fort Dylanai Monument ,
× RELATED கொல்லங்கோடு அருகே ஓட்டலில் தோசை கேட்டவர் மீது தாக்குதல்