×

உப்புக்கோட்டையில் விளையாட்டு மைதானம் கலெக்டரிடம் இளைஞர்கள் கோரிக்கை

தேனி, நவ. 26: தேனி அருகே உப்புக்கோட்டையில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இளைஞர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சுமார் 25க்கும் மேற்பட்டோர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்தி கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்பதாவது: உப்புக்கோட்டை கிராமத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள இளைஞர்களிடத்தில் ராணுவம் மற்றும் காவல் துறையில் சேர்ந்து பணியாற்றிட ஆர்வம் அதிகம் உள்ளது. இதில் சேர உடல்திறனை மேம்படுத்த உப்புக்கோட்டையில் விளையாட்டு மைதானம் இல்லை. விளையாடுவதற்காக 12 கி.மீ தொலைவில் உள்ள தேனிக்கு வரவேண்டியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உப்புக்கோட்டையில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

கலெக்டரிடம் விவசாயி புகார்:
ஆண்டிபட்டி அருகே மேக்கிழார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கையன் மகன் ஈஸ்வரன். இவர் நேற்று தன் குடும்பத்தினருடன் தேனி கலெக்டரிடம் மனு அளித்தார். அதுகுறித்து ஈஸ்வரன் கூறியதாவது : மேக்கிழார்பட்டியில் எனக்கு சொந்தமாக 64 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்து வந்தேன். இதனை ஆதிதிராவிடர் நலத்துறையினர் தவறாக பத்திரப்பதிவு செய்து இந்நிலத்தினை பிரித்து ஏழை தாழ்த்தப்பட்டவர்களுக்கு பட்டா வழங்கி வருகின்றனர்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தனக்கு வேறு சொத்து இல்லாத நிலையில், இந்நிலத்தை நம்பியே உள்ளேன். எனவே, எனக்கு சொந்தமான நிலத்தை பிரித்து இலவச பட்டா வழங்குவதை தடுக்க வேண்டும் என்றார். இக்கோரிக்கைக்காக ஏற்கனவே, கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றும் நடவடிக்கை இல்லை என பரிதாபமாக தெரிவித்தார்.

சாலை அமைக்க கோரிக்கை:
தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் அனுக்கிரகா நகர் உள்ளது. இந்நகரில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் ராஜூ, ராஜேந்திரன், முத்துராமலிங்கம், முகமதுரபீக், செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் தேனி கலெக்டர் பல்லவிபல்தேவிடம் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது, தேனியில் இருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் அசோக முத்திரை கொண்ட சிங்கத்தூணில் இருந்து மயிலாடும்பாறை, அழகர்கோயில் செல்லும் சாலையில் அனுக்கிரகாநகர் உள்ளது. இப்பகுதியில ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர் இந்நகர் செல்லும் சாலை மிகக் குறுகியதாக உள்ளது.

இச்சாலை வழியாக பள்ளி வாகனங்கள், விவசாய நிலங்களுக்கு செல்லும் டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.மிகவும் குறுகிய, ஆபத்து மிகுந்த வளைவுகளை கொண்ட சாலையாக உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே, இச்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என குடியிருப்பாளர் நலச் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : playground collector ,
× RELATED குமுளி அருகே குடியிருப்பு பகுதியில் காட்டெருமைகள் உலா பொதுமக்கள் அச்சம்