×

முசிறி, மணப்பாறையில் சத்துமிகு சிறுதானிய விழிப்புணர்வு பிரசார பேரணி

முசிறி , நவ.26: முசிறியில் வேளாண்மை துறையின் சார்பாக தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சிறுதானிய திட்ட விளக்க பிரசார ஊர்தி துவக்கவிழா நடைபெற்றது. முசிறி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை துறையின் சார்பில்நடைபெற்ற நிகழ்ச்சிக்கு
முசிறி சப்-கலெக்டர் பத்மஜா தலைமை வகித்து பிரசார வாகனங்களையும், விழிப்புணர்வு பேரணியையும் துவக்கி வைத்தார். திருச்சி வேளாண்மை இணை இயக்குனர்கள் சரவணன் , ராஜேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் நளினி, சுரேஷ் ,கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் சிறுதானிய உணவின் அவசியம் குறித்தும், சிறுதானிய பயிர்களை பயிரிடுவதால் விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் பற்றியும் பேசினர். அதனைத்தொடர்ந்து முசிறி சப்-கலெக்டர் பத்மஜா அங்கிருந்த பொதுமக்களிடம் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வு விவரங்கள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

மேலும் சிறுதானியம் வறட்சியை தாங்கி வளரக்கூடியது , அதனை சாகுபடி செய்வதற்கு குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே தேவைப்படுவதால் இச்சாகுபடியினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு பொதுமக்களுக்கு சத்துமிக்க உணவுகளை விவசாயிகளால் வழங்கிட இயலும் என கூறினார். சிறுதானியங்களின் பயன்பாடுகள் மற்றும் பயிரிடும் முறை குறித்த பிரசாரங்களை முசிறி தொட்டியம் , தா.பேட்டை, உப்பிலியபுரம், துறையூர் உள்ளிட்ட 5 வட்டாரங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் பிரசார வாகனங்கள் பயணிக்க உள்ளது. பேரணியில் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பேரணி புதிய பேருந்து நிலையம் புறவழிச்சாலை, முசிறி கைகாட்டி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பேரணியில் உதவி தலைமை ஆசிரியர் சேகர், மேலாண்மை உதவி இயக்குனர்கள், வேளாண்மை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மணப்பாறை: மணப்பாறையில்,தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் சத்துமிகு சிறு தானியங்கள் சாகுபடி மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு பிரசார ஊர்தியை திருவரங்கம் சார்- ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சரவணன் தலைமை ஏற்றார்.

இந்த இயக்கத்தில் மணப்பாறை, வையம்பட்டி மற்றும் மருங்காபுரி வட்டாரத்திற்கு என தனித்தனியாக வாகனங்கள் அனைத்து கிராமத்திற்கும் சென்று பிரசாரம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மணப்பாறை வேளாண்மை உதவி இயக்குனர் கலையரசன், வையம்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் ரங்கராஜன், மருங்காபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மனோன்மணி மற்றும் அனைத்து வேளாண்மை துறையின் அனைத்து அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்,சத்து மிகு சிறுதானியங்களான சோளம், கம்பு, மக்காச்சோளம், ராகி, வரகு, தினை, சாமை, குதிரைவாலி சாகுபடி செய்து, உணவில் அன்றாடம் பயன்படுத்தி, நோயற்ற நல்வாழ்வு, மற்றும் ஆரோக்கியமான சந்ததியினரை உருவாக்குவோம். அரசு மானிய திட்டங்களை பெறுவோம் என்பதாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Musiri ,Satyam ,awareness campaign rally ,Manapparai ,
× RELATED கோடைகாலம் என்பதால் குடிநீரை...