×

இந்தியாவிலேயே முதன் முறையாக திருச்சி அரசு மருத்துவமனையில் விவசாயிக்கு 15 செமீ சிறுநீரக அடைப்பை அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை டீன் தகவல்

திருச்சி, நவ.26: இந்தியாவிலே முதன்முறையாக திருச்சி அரசு மருத்துவமனையில் விவசாயிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளதாக டீன் வனிதா தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் குணசீலம் அடுத்த வடக்கு சித்தாம்பூரை சேர்ந்தவர் சுப்பையா (47). விவசாயி. இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். சுப்பையாவுக்கு கடந்த 2 ஆண்டாக சிறுநீரக பையில் அடைப்பு ஏற்பட்டது. சிறுநீர் கழிப்பது படிப்படியாக நின்று போனதால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் பலனில்லை.

இதையடுத்து அவர் திருச்சி மகாத்மாகாந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 4 மாதத்திற்கு முன் மருத்துவ பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு சிறுநீரக குழாயில் 15 செமீ நீளத்திற்கு அடைப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இரைப்பையில் இருந்து ஒரு குழாய் அமைத்து அந்த குழாயை சிறுநீர் பாதையில் பொருத்தி அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். தற்போது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு சுப்பையா குணமடைந்து உள்ளார். இதுகுறித்து நேற்று டீன் வனிதா கூறுகையில், விவசாயி சுப்பையா சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டார்.

அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜேஷ் ராஜேந்திரன் தலைமையில் டாக்டர்கள் கண்ணன், ராஜசேகரன், சிவக்குமார் ஆகியோர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். அறுவை சிகிச்சை மூலம் அவரது இரைப்பையில் ஒரு குழாய் அமைத்து அந்த குழாய் சிறுநீரக பகுதியில் பொருத்தப்பட்டது என்பது இந்த அறுவை சிகிச்சையின் சிறப்பாகும்.

வெற்றிகரமான இந்த அறுவை சிகிச்சை மூலம் சுப்பையா தற்போது குணமடைந்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் இந்தியாவிலே முதன்முறையாக சிக்கலான, சவாலான இந்த அறுவை சிகிச்சையை திருச்சி அரசு மருத்துவமனையில் நடத்தி முடிக்கப்பட்டது. மேலும் திருச்சி அரசு மருத்துவமனை உலக அளவில் 2வது முறையாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை செலவாகும்.  இவ்வாறு டீன் வனிதா கூறினார்.

Tags : Doctors ,Trichy Government Hospital ,kidney blocker surgeon ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...