×

அரசு சார்பில் கொடுக்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவுக்கான நிலத்தை அளந்து கொடுக்கக்கோரி பொதுமக்கள் தர்ணா அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

அரியலூர், நவ. 26: அரசு சார்பில் கொடுக்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவுக்கான நிலத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ரத்னா தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் உடையார்பாளையம் அருகே உள்ள வாணாதிராயன்பட்டினம் பகுதி மக்கள் மனு அளித்தனர். அதில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள வாணாதிராயன் பட்டினம் கிராமத்தில் 2007ம் ஆண்டு 98 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கி 12 ஆண்டுகளான நிலையில் இதுவரை இவர்களுக்கான இடத்தை அளந்து கொடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழி அமைத்துதர வேண்டும்: எருத்துக்காரன்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில், ஊர்க்குட்டையின் மேல்புறக்கரை பாதை வழியாக ஆடு, மாடுகளை நிலங்களுக்கு ஓட்டி சென்று வந்தனர். மேலும் மாட்டு வண்டியில் தொழு உரம் ஏற்றி காட்டுக்கு சென்று வந்தோம். தற்போது புறவழிச்சாலையின் இருபக்கமும் சுவர் அமைத்தபிறகு பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு நிலங்களுக்கு சென்றுவர வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை: வாலாஜாநகர பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் ஊரில் உள்ள 900 வீடுகளுக்கு ஒரு டிரான்ஸ்பார்மர் மூலம் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வாலாஜா நகரம் தெற்கு தெருவில் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு போதிய மின்சாரம் கிடைக்காமல் விளக்குகள் சரிவர எரியவில்லை. தெருவிளக்குகளும் எரியவில்லை. இதனால் சாலையில் செல்லும்போது விஷ ஜந்துக்கள் பொதுமக்களை கடிக்க வாய்ப்புகள் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே புதிய மின்மாற்றி அமைத்து தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அடிப்படை வசதி செய்ய வேண்டும்: அரியலூர் புதிய மார்க்கெட் தெரு மக்கள் அளித்த மனுவில், அரியலூர் புதிய மார்க்கெட் தெருவில் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, குடிநீர் வசதி இல்லாமல் சுகாதார மற்ற நிலையில் வசித்து வருகிறோம். மழை காலங்களில் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் அங்குள்ள காலிமனைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது. எனவே இந்த பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 409 மனுக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் 22 கோரிக்கை மனுக்கள் என மொத்தம் 431 மனுக்கள் பெற்று இம்மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலருக்கு கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஏழுமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Ariyalur ,collector ,land ,government ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...