×

குளித்தலை- பாளையம் நெடுஞ்சாலையில் ஆபத்தான வளைவில் ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து அபாயம்

தோகைமலை, நவ. 26: கரூர் மாவட்டம் தோகைமலை வழியாக குளித்தலை-மணப்பாறை மற்றும் பாளையம்-திருச்சி ஆகிய 2 மெயின் ரோடுகள் செல்கிறது. இதில் மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்பட தென் மாவட்டங்களையும், சேலம், கரூர், நாமக்கல், பெரம்பலூர், தர்மபுரி உள்பட வட மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய சாலையாக குளித்தலை- மணப்பாறை நெடுஞ்சாலையும், திருச்சி, தஞ்சாவூர், நாகபட்டினம் உள்பட கிழக்கு மாவட்டம் மற்றும் பாளையம், கரூர், குஜிலியம்பாறை, கடவூர், அரவக்குறிச்சி, பழனி, ஒட்டன்சத்திரம் உள்பட மேற்கு மாவட்ட பகுதிகளையும் இணைக்ககூடிய முக்கிய சாலையாக பாளையம்-திருச்சி நெடுஞ்சாலையும் இருந்து வருகிறது.

இந்த 2 நெடுஞ்சாலைகள் வழியாக கனரக வாகனங்கள், பேருந்துகள் உள்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் குளித்தலை-மணப்பாறை நெடுஞ்சாலையில் பாளையம்-திருச்சி நெடுஞ்சாலையானது தோகைமலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் முன் திருச்சி சாலையும், சாம்பட்டாங்குளம் என்று அழைக்கப்படும் செட்டிநத்தம்குளம் அருகே பாளையம் சாலையும் கடந்து செல்கிறது. இந்நிலையில் தோகைமலையில் உள்ள செட்டிநத்தம்குளம் அருகே பாளையம் சாலையும், குளித்தலை சாலையும் மிகவும் ஆபத்தான வளைவாக இருந்து வருகிறது.
இதனால் வாகன விபத்துகளை தடுக்க பாளையம் சாலையில் வேகத்தடையும், சாலைகளில் வரும் வாகனங்கள் தெரியும் அளவிற்கு இடங்களும் அமைத்து இருந்தனர்.

மேலும் பாளையம் சாலையின் வடபுறத்தில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் சிறுசிறு குடியிருப்புகளும் உள்ளன. ஆனால் தற்போது நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் வசிக்கும் ஒரு சிலர் குளித்தலை மற்றும் பாளையம் சாலைகளில் வரும் வாகனங்கள் தெரியாத வகையில் நெடுஞ்சாலை சாலையின் அருகே பெரிய அளவில் ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை அமைத்து முன்பணமாக ரூ.50 ஆயிரமும், மாத வாடகையாக ரூ.5 ஆயிரம் என்றும் தனியார் கடைகளுக்கு வாடகைக்கு விட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் வருவாய்துறை, தோகைமலை ஊராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைதுறை, மின்சார வாரியம் என்று அனைத்து துறை அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்போடு மிகவும் ஆபத்தான வளைவில் தனியார் கடைகளுக்கு வாடகைக்கு விடுவதற்காக பெரிய அளவில் கொட்டகை அமைத்து இருப்பதால் தினந்தோறும் விபத்துகளை ஏற்படுத்தும் சூழல் இருப்பதாக கூறுகின்றனர். மேலும் மழை காலங்களில் சாலைகளில் வடியும் தண்ணீரானது குளித்தலை-மணப்பாறை சாலையில் அமைத்திருக்கும் பாளத்தின் கீழ்பகுதி வழியாக செட்டிநத்தம்குளத்திற்கு செல்கிறது. ஆனால் தற்போது ஆபத்தான வளைவில் கடை அமைப்பதோடு, மழைநீர் செல்லாத வகையில் கிராவல் மண் அடித்து வடிகால் பகுதியை அழித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

தனியார் பட்டா இடங்களில் கட்டுமானத்திற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திக்கும்போது, ஆவனங்கள் சரியாக இல்லை என்பது உள்பட பல்வேறு காரணங்களை காட்டி அலைக்கழித்து வருவதோடு நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில் ஆபத்தான வளைவு பகுதியில் ஆக்கிரமித்து அமைத்து உள்ள கடைக்கு எப்படி அதிகாரிகள் அனுமதி அளித்தார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குளித்தலை-பாளையம் சாலையில் ஆபத்தான வளைவு அருகே ஆக்கிரமித்து உள்ளனர் என்று பலமுறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர். ஆகவே குளித்தலை-பாளையம் சாலையில் ஆபத்தான வளைவு அருகே ஆக்கிரமித்து தனியார் கடைகளுக்கு வாடகைக்காக எழுப்பி வரும் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags : occupancy shops ,bend ,highway ,Bathi-Palayam ,
× RELATED அருமனை அருகே பழுதான மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சம்