×

ஆத்தூர் பகுதியில் வனவிலங்குகளை தடுக்க விளைநிலங்களில் மின்வேலி

ஆத்தூர், நவ.26:  ஆத்தூர் பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த, மின்வேலி அமைக்கும் விபரீதம் அரங்கேறி வருகிறது. ஆத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், பரவலாக நெல் சாகுபடி செய்துள்ளனர். ஏக்கர் கணக்கில் நெல் பயிர் செழித்து வளர்ந்துள்ள நிலையில், வனவிலங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் நெல் பயிர் நன்கு செழித்து வளர்ந்துள்ளது. கல்வராயன் மலைப்பகுதியிலிருந்து வரும் வனவிலங்குகள், வயல்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. கல்பகனூர், சிவகங்கைபுரம், அண்ணாநகர், காராமணித்திட்டு, மெரப்பங்காடு உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப்பன்றி, காட்டெருது உள்ளிட்ட வனவிலங்குகள், நெல் பயிரை குறி வைத்து சேதப்படுத்தி வருகின்றன.

பயிர்களை வன விலங்குகளிடமிருந்து காக்க, விவசாயிகள் விளைநிலங்களை சுற்றிலும் மின்வேலிகள் அமைத்துள்ளனர். இதனால், மின்சாரம் பாய்ந்து வனவிலங்குகள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் உள்ள பெரும்பான்மையான விளை நிலங்களை சுற்றி, கம்பி வேலிகளை அமைத்து அதில் இரவு நேரங்களில் மின்சாரத்தை பாய்ச்சுகின்றனர். இவ்வாறு மின் வேலிகள் அமைக்கப்பட்டிருப்பது தெரியாமல் மனிதர்கள் சென்றால், அவர்களும் பலியாகும் அபாயம் உருவாகியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாமல் விவசாயிகள் வேலை தேடி வெளியூர்களுக்கு செல்லும் அவலம் ஏற்பட்டது.

இந்நிலையில், தொடர் மழையால் இப்பகுதியில் விவசாயம் செழித்துள்ளது. ஆனால், வனவிலங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க கோரி வனத்துறையினரிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே, பயிர்களை காத்திடும் வகையில், மின்வேலிகளை நாங்களே அமைத்துக் கொண்டோம்,’ என்றனர். இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்பதற்காக தொடர்பு கொண்டபோது, யாரும் போனை எடுக்கவில்லை.

Tags : farms ,area ,Attur ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...