×

திருப்பத்தூர் அருகே ‘கழுமரம் ஏறிய அரசனின் நடுகல்’ கண்டுபிடிப்பு கி.பி.8ம் நூற்றாண்டை சேர்ந்தது

திருப்பத்தூர், நவ.26: திருப்பத்தூரில் உள்ள வரலாற்று ஆய்வாளர்கள் கந்திலி சுற்றுவட்டாரப் பகுதியில் வழக்கமான கள ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நரியனேரியில் கி.பி. 8ம் நூற்றாண்டை சேர்ந்த ‘கழுமரம் ஏறிய அரசனின் நடுகல்’ இருப்பதைக் கண்டறிந்தனர். இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது: திருப்பத்தூரில் இருந்து 10கி.மீ தொலைவில் நரியனேரி என்னும் சிறிய ஊர் அமைந்துள்ளது. பஸ் நிறுத்தத்தில் இருந்து வலது புறமாகச் செல்லும் உட்புறச் சாலையில் அவ்வூரைச் சேர்ந்த மணி என்பவரது விவசாய நிலத்தின் நடுவில் பழமையான ‘நடுகல்’ ஒன்று அமைந்துள்ளதைக் கண்டறிந்தோம். இக்கல்லானது 11 அடி நீளமும், 3 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இக்கல்லில் நீண்ட கழுமரத்தில் ஆண் ஒருவன் அமர்ந்த நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளான். அவனது இடது கையினை மார்பிலும் வலது கையினை மேல்நோக்கி உயர்த்தியவாறும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளான்.

அவனது தலைக்கு மேல்புறம் பெரிய அளவிலான குடை ஒன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இக்குடை அவனை ஒரு அரசன் என அடையாளப்படுத்துகிறது. கல்லின் இடது புறத்தில் நின்ற நிலையில் பெண் ஒருத்தி எரியும் விளக்கினை ஏந்தியவாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளாள். இது இறந்த அரசனை தெய்வமாக வழிபடும் நிலைதனை எடுத்துரைப்பதாக உள்ளது.கழுமரத்தில் உயிர்துறந்த சிற்றரசன் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவனாக இருக்கக்கூடும். ஆகவேதான் அந்நிகழ்வினை இக்கல்லில் சிற்பமாக வடித்து மக்கள் வணங்கி வந்துள்ளனர். இத்தகவலை உறுதி செய்து இக்கல்லின் காலம் கி.பி. 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று முன்னாள் தொல்லியல் துறையை சார்ந்த அதிகாரிகள் மற்றும் வரலாற்றுத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Tags : king ,Tirupathur ,
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்