×

மாவட்டம் பிரித்ததில் பாரபட்சம் நகர வர்த்தக சங்கம் சார்பில் நாளை கடையடைப்பு போராட்டம்

காஞ்சிபுரம், நவ 26: காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து அதன் எல்லைகளை சிறிதாக்கியது மற்றும் புதிய பஸ் நிலையம் அமையும் இடம் தேர்வு குறித்து கருத்து கேட்பு கூட்டம் நகர வர்த்தக சங்கம் சார்பில் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. சங்க தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம், பொருளாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் மணிவண்ணன் வரவேற்றார். கூட்டத்தில் காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் கலந்து கொண்டு பேசியதாவது. ஓரு மாவட்டத்தை இரண்டாக பிரிக்கும் போது, தாய் மாவட்டத்தில் அனைத்து வசதிகளும் இருக்கும் வகையில் தான் பிரிப்பது வழக்கம். அப்படியே வேலூர், தென்காசி உள்பட ஏற்கனவே பிரிக்கப்பட்ட மாவட்டங்களும் உள்ளன. ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த மாமல்லபுரம், வண்டலூர், வேடந்தாங்கல் உள்ளிட்ட வருவாய் வரக் கூடிய இடங்கள்,பெரும் தொழிற்சாலைகள் உள்பட ஆனைத்தும் செங்கல்பட்டு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் கடற்கரை நகரம், துறைமுக நகரம் என்றாலே காஞ்சிபுரத்தை தான் குறிக்கும் என்ற நிலை மாறி, மிகச்சிறிய மாவட்டமாக்கி இருக்கிறார்கள். ஒரு மாவட்டத்தின் வருவாய் குறைந்து விட்டால், அந்த மாவட்டத்துக்கு வரக்கூடிய வளர்ச்சி நிதிகளும் குறைந்து விடும். எந்த வசதிகளையும் போராடி பெற வேண்டும் என்ற நிலை வந்து விடும்.

பிரிக்கப்பட்ட செங்கல்பட்டுக்கு 9 நகராட்சிகளும், காஞ்சிபுரத்துக்கு ஒரே ஒரு நகராட்சியும் உள்ளது. தாலுகாவை பொறுத்த வரையில் செங்கல்பட்டுக்கு 12, காஞ்சிபுரத்துக்கு 5 மட்டுமே உள்ளது. இதே போல ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள் அனைத்தும் மிககுறைவாகி விட்டன. காஞ்சிபுரம் புதிய பஸ் நிலையத்துக்காக 2 இடங்களை அரசு பரிசீலித்தது. அதில் ஒன்று ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமானது. சர்வ தீர்த்தக்குளம் அருகேயுள்ள இந்த இடம் 16.79 ஏக்கர் நிலம். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இதை விலை கொடுத்து வாங்கி பஸ் நிலையம் கட்ட முடியும். தமிழகத்தில் பல பஸ் நிலையங்கள் புதிதாக கட்டி பலனில்லாமல் இருக்கின்றன. அதே நிலை காஞ்சிபுரத்துக்கும் வந்து விடும். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதியில் பஸ் நிலையம் ஆமைத்தால் பொதுமக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே பஸ் நிலையத்தை மக்களுக்கு பயனுள்ள இடத்தில் மட்டுமே அமைக்க வேண்டும் என்றார். மேலும், கூட்டத்தில் பேசிய சங்க நிர்வாகிகள், மாவட்டத்தை பிரிப்பதில் பாரபட்சம் காட்டியதை கண்டித்து, நாளை நடைபெறும் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக பேசினார்கள். அதே நேரத்தில் காஞ்சிபுரம் நகர அனைத்து வணிகர் சங்கப் பேரவை, ராஜாஜி மார்க்கெட் வியாபாரிகள், இணைப்புச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் வியாபாரிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தனர்.

Tags : strike action ,district ,City Trade Association ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...