×

திருப்போரூர் பகுதியில் சுற்றி திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள் கூட்டம்

திருப்போரூர், நவ. 26: திருப்போரூர் பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள், கூட்டம் கூட்டமாக சென்று, பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. அவற்றை பிடித்து, காட்டில் விடும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். திருப்போரூரை சுற்றி சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி உள்ளது. இங்கு முந்திரி உள்பட பல்வேறு பழ மரங்கள் உள்ளன. காலப்போக்கில் முந்திரி மரங்களின் ஆயுள் முடிந்து விட்டதால், வனப்பகுதியில் வசித்த குரங்குகள் நகரங்களை நோக்கி வரத் தொடங்கின. இதையொட்டி, தற்போது திருப்போரூர் பகுதி முழுவதும் ஏராளமான குரங்குகள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன. குறிப்பாக காவல் நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம், கந்தசுவாமி கோயில் ஆகியவை ஒருங்கே அமைந்துள்ள பகுதியில், இந்த குரங்குகள் கூட்டம் அதிகரித்துள்ளன. இந்த இடங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் உணவு பொருட்கள், பழங்களுடன் வருவதால் அவற்றை திடீரென பிடுங்கி கொண்டு ஓடுகின்றன.  சிறு குழந்தைகள் இதனால் அலறி பயந்து விடுகின்றனர். மேலும், வீடுகளில் வசிப்போர், ஓட்டல்களில் இருந்து வாங்கி செல்லும் உணவுப் பொருட்களையும், கடைகளில் இருந்து வாங்கி செல்லும் பழங்களையும் பிடுங்கிச் செல்கின்றன. இதுகுறித்த புகார்களின் பேரில், வனத்துறை அவ்வப்போது குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து காட்டில் விடும் பணியை மேற்கொண்டனர்.

ஆனாலும், இருப்பினும் அங்கு போதிய உணவு கிடைக்காததால் மீண்டும் அவை நகர பகுதிக்கே திரும்பி விட்டன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, பொதுவாக குரங்குகள் தானாகவே உணவுகளை தேடி உண்ணும் பழக்கம் கொண்டவை. வனப்பகுதியில் உள்ள மரங்களின் எண்ணிக்கை குறைந்ததால் அவை நகரப்பகுதிக்கு வந்தன. பொதுமக்களும் அவற்றிடம் பழகி உணவுப் பொருட்களை கொடுத்து விட்டனர். இதனால் அவை நேரடியாக உணவு தேடிக் கொள்வதை நிறுத்தி விட்டு பொதுமக்களிடமிருந்து பிடுங்கத் தொடங்கி விட்டன. பொதுமக்கள் குரங்குகளுக்கு உணவு அளிப்பதை நிறுத்த வேண்டும். வனப்பகுதியை பாதுகாத்தால் அவை மீண்டும் அங்கே சென்று வசிக்க தொடங்கும் என்றார். ஆனாலும், திருப்போரூர் கோயிலை சுற்றிய பகுதிகளில் வசிக்கும் குரங்குகளை பிடித்து காட்டில் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags : group ,civilians ,area ,Tiruppore ,
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.