×

அக்.7ல் நவராத்திரி விழா தொடக்கம் விற்பனைக்கு குவிந்த கொலு பொம்மைகள்: சுவாமி விக்ரகங்கள் பவனி உண்டா?

நாகர்கோவில்: புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 7ம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவின் 9 வது நாள் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விழா நடக்கும் 9 நாட்களிலும் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும். முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது.நவராத்திரியின் போது பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை. நவராத்திரியின் முக்கிய அம்சம் கொலு வைப்பதாகும். 3 முதல் 9 படிகள் என அவரவர் வசதிக்கு ஏற்ற படி அமைத்து, கொலு பொம்மைகளை அலங்கரிப்பார்கள்.இதையொட்டி கொலு பொம்மைகள் விற்பனை, நாகர்கோவிலில் தொடங்கி உள்ளது. நாகர்கோவிலில் வடிவீஸ்வரம், கோட்டார், பார்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கொலு பொம்மைகள் விற்பனை கடைகள் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ளன. கடைகளிலும் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தசாவதாரம், திருமணம், அறுபடை வீடு, அஷ்டலஷ்மி, ஆண்டாள் திருமஞ்சனம், கிருஷ்ண லீலை, சீதா கல்யாணம், வாஸ்து லட்சுமி, விஸ்வரூபம், சீமந்தம் செட் பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என வகைவகையான கொலு பொம்மைகள் விற்பனைக்காக வரவழைக்கப்பட்டுள்ளன. மண்ணாலான சிலைகள் மட்டுமின்றி, சார்ட் பேப்பர், காகிதக் கூழ், பிளாஸ்ட் ஆப் பாரிஸ் ஆகியவற்றிலும் செய்யப்பட்ட சிலைகள் உள்ளன. சிறிய ரக பொம்மைகள் ₹500 ல் இருந்து விற்பனைக்கு உள்ளது. பெரிய ரக பொம்மைகள் ரூ.5000ம் வரை உள்ளன.திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவுக்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், வேளிமலை முருகன், பத்மநாபபுரம் சரஸ்வதி தேவி ஆகிய விக்ரகங்கள் பவனியாக கொண்டு செல்லப்படும். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக கட்டுப்பாடுகளுடன் கொண்டு செல்லப்பட்டது. இந்த ஆண்டும் அதே போல் கட்டுப்பாடுகளுடன் அக்.3ம்தேதி திருவனந்தபுரத்துக்கு சுவாமி விக்ரகங்கள் கொண்டு செல்லப்படும் என தெரிகிறது. இது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்ட கலெக்டர், எஸ்.பி. தலைமையில் அடுத்த வாரம் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தற்போது குமரி மாவட்டத்தில் உள்ள கொரோனா பாதிப்பு நிலவரம், கேரளாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும். கலெக்டர் முடிவுப்படி நடவடிக்கை இருக்கும் என்றனர்….

The post அக்.7ல் நவராத்திரி விழா தொடக்கம் விற்பனைக்கு குவிந்த கொலு பொம்மைகள்: சுவாமி விக்ரகங்கள் பவனி உண்டா? appeared first on Dinakaran.

Tags : Navaratri Festival ,Kovinda Kolu ,Nagarko ,Puratasi ,Navratri ,Navratri Festival ,Ack.7 ,
× RELATED நாகர்கோவில் மாநகரில் இன்று முதல் 30 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்