×

பருவமழை குறைந்ததால் அமராவதி அணைக்கு நீர்வரத்து சரிந்தது

உடுமலை,நவ.26: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை குறைந்ததால் அமராவதி அணைக்கு நீர்வரத்து குறையத் துவங்கியது.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மொத்தம் 90 அடி கொள்ளளவு கொண்டது. ஆகஸ்ட்,செப்டம்பர் மாதம் பெய்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து 80அடியை தொட்டது. இதன் காரணமாக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு திருப்பூர்,கரூர் மாவட்டங்களில் உள்ள 57,500 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது. இதையடுத்து விவசாயிகள் கடந்த 2 மாதத்திற்கு முன்பாக நெல்சாகுபடி செய்வதற்காக தங்களது விளைநிலங்களை உழவு ஓட்டி தயார் நிலையில் வைத்திருந்தனர். தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடவும், பருவமழை அவ்வப்போது கைகொடுக்கவும் விவசாயிகள் கவலையின்றி நெல் நாற்றுக்களை நட்டி சாகுபடி பணியை ஆர்வத்துடன் துவங்கினர்.

இம்மாதம் முதல்வாரம் வரை அவ்வப்போது மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை நீடித்தது. இதன் காரணமாக அமராவதி அணைக்கு கணிசமான அளவு தண்ணீர் வரத்து இருந்தது. 57,500 ஏக்கர் பாசனத்திற்காக அணையில் இருந்து இதுவரை 3500 மில்லியன் கனஅடி(மூன்றரை டிஎம்சி) தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில்,பருவமழை குறைந்ததன் எதிரொலியாக அணைக்கு நீர்வரத்து குறைந்தது. நேற்றைய நிலவரப்படிஅணையின் நீர்மட்டம் 63.19 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து நீர்வரத்து 283 கனஅடியாகவும், வெளியேற்றம் 605 கனஅடியாகவும் உள்ளது.இருப்பினும் டிசம்பர் மாதம் குறுவை சாகுபடி நிறைவடைந்து நெல்அறுவடை துவங்கி விடும் என்பதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.


Tags : Amaravathi Dam ,
× RELATED அரவக்குறிச்சி பகுதியில் அமராவதி அணை திறப்பால் விவசாய பணிகள் மும்முரம்