×

மாறுபட்ட கருத்து தெரிவிக்கும் ஆய்வாளர்கள் ஆப்பிரிக்க மண்புழு உரம் பயன்படுத்துவதால் பாதிப்பா?

ஊட்டி, நவ. 26:  உழவர்களின் நண்பன் என அழைக்கப்படும் மண்புழுக்களில், ஆப்பிரிக்க மண் புழுக்கள் பயன்படுத்துவது குறித்து ஆய்வாளர்கள் மாறுப்பட்ட கருத்து கூறுவதால் விவசாயிகள் குழப்பமடைந்துள்ளனர். விவசாய நிலங்களில் மேல்மட்டம், இடைமட்டம் மற்றும் சற்று ஆழம் என மூன்று வித மண்புழுக்கள் வாழ்கின்றன. விவசாய நிலங்களில் உள்ள பயோமாஸ் எனப்படும் தாவர கழிவுகளை உண்ணும் மண் புழுக்கள் தன்கை கொண்டவை. அத்தோடு, விவசாய நிலத்தில் உள்ள தேவையற்ற பாக்டீரியாக்களையும், நோய் கிருமிகளையும் உட்கொண்டு, அதனை கழிவுகளாக வெளியேற்றும். இந்த கழிவுகள் மண்ணை வளமிக்கதாக மாற்றுகிறது. மேலும் நிலத்தில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகள் மற்றும் மாற்றத்தினை தவிர்க்க பெரும் உதவியாக செயல்படுகிறது. மண்ணுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை உரங்களை பயன்படுத்தி வரும் விவசாயிகளில் பலர் மண்புழு உரங்களை உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகின்றனர். வெர்மி கம்போஸ்ட் எனப்படும் மண்புழு உரத்திற்கான சந்தையும் தற்போது அதிகளவு வளர்ச்சியடைந்து வருகிறது.  தற்போது ஒரு சிலர் மண்புழு விற்பனையில் இறங்கியுள்ளனர். ஆன்-லைனில் கூட தற்போது மண் புழுக்கள் விற்பனை செய்யும் அளவிற்கு மண்புழு சந்தை வளர்ந்துள்ளது. இதில் ஆன்-லைனில் விற்பனை செய்யப்படும் மண்புழுக்களை வாங்கி உரம் தயாரிக்க பயன்படுத்தும் விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் உள்ள மண் புழுக்கள் மூலமாகவே உரம் தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஆப்பிரிக்க மண்புழுக்கள் கொண்டு உரம் தயாரிக்கப்படுகிறது. ஆப்பிரிக்க மண்புழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மண்புழு, தற்போது பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.  இது குறித்து வேளாண் ஆய்வாளர் பிரான்சிஸ் கூறியதாவது: விவசாய நிலங்களில் மண்புழுக்கள் தானாக வளரும் அல்லது கால்நடைகளின் சாணத்தை வைத்தால்போதும். சில நாட்களில் மண்புழுக்கள் உற்பத்தியாகும். ஆனால், தற்போது மண்புழு உரம் தயாரிப்பில் ஈடுபடும் சிலர் ஆப்பிரிக்க மண்புழுக்களை வெளியிலிருந்து வாங்கி விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆப்பிரிக்கா மண்புழுக்கள் இங்கு காணப்படும் மண்புழுவை விட அளவில் பெரியதாக இருக்கும், அதிகம் உண்ணும், அதிகம் கழிவுகளை வெளியேற்றும். ஆப்பிரிக்க மண்ணில் பயோமாஸின் அளவு நான்கு சதவீதம் இருந்தால், நம் நாட்டில் உள்ள மண்ணில் 2 சதவீதமாக இருக்கும். மண்புழு உர தயாரிப்பில் ஆப்பிரிக்க மண்புழுக்களை பயன்டுத்தும்போது, அதன் முட்டைகளும் அதிக அளவில் இருக்கும். இந்த உரத்தை பயிர்களுக்கு இடும்போது பயிர்களையும் சேர்த்து மண் புழுக்கள் உண்ணும் அபாயம் உள்ளது. எனவே, முடிந்த வரை இந்திய மண்புழுக்களை பயன்படுத்துவது சிறந்தது, என்றார்.

 தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் கெய்சர் லூர்துசாமி கூறியதாவது: ஆப்பிரிக்க மண் புழுக்கள் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இவைகள் மித வெப்ப பகுதிகள் மற்றும் வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் உற்பத்தியாகின்றன. நீலகிரி மாவட்டத்தில் குளிர் அதிகமாக உள்ளதால், இங்கு அதிகம் உற்பத்தியாகாது. இதனால், இங்கு இதனை பயன்படுத்த விவசாயிகளுக்கு நாங்கள் பரிந்துரை செய்வதில்லை. நமது மண்ணில் கிடைக்கும் மண் புழுக்களை கொண்டே உரம் தயாரிக்க சொல்கிறோம். ஆப்பிரிக்க மண் புழுக்களால் இதுவரை பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை, என்றார்.  வேளாண்துறை ஆய்வாளர்கள் மண் புழுக்களை விவசாயிகள் பயன்படுத்துவது குறித்து மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களால் நமது பாரம்பரிய கெளுத்தி மீன்கள் குறைய வாய்ப்புள்ளதாக கூறி இந்த மீன்களை வளர்க்க தற்போது மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஆப்பிரிக்க மண்புழுக்கள் விற்பனையில் சிலர் ஈடுபட்டுள்ளதாலும், இது ஆன்லைனிலும் கிடைப்பதால், விவசாயிகள் இவைகளை பயன்படுத்தலாமா? அல்லது உள்ளூர் மண்புழுக்களை பயன்படுத்தலாமா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.

Tags : Analysts ,Earthworm ,African ,
× RELATED பசுமைப் போராளி…வான்காரி மாத்தாய்