×

சாயப்பட்டறைகளுக்கு சீல் வைப்பதால் ரூ.15 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு

ஈரோடு, நவ. 26: சாயப்பட்டறைகளுக்கு சீல் வைப்பதால் ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படுகிறது. இதற்கு மாற்று வழியை யோசிக்க வேண்டும் என ஈரோட்டில் நடந்த விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5ம் தேதி நடைபெற உள்ள 37வது மாநில மாநாடு திட்டமிடல் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார். மாநாடு தொடர்பாக மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், மாநில இணைச் செயலாளர் சிவநேசன் ஆகியோர் பேசினர்.இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசியதாவது: ஆன்லைன் வர்த்தகம் மூலம் உள்நாட்டு வணிகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். குறிப்பாக, பிலிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வலியுறுத்தி டிசம்பர் 17ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஈரோட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜவுளி வர்த்தகம் 20 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், தற்போது 5 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்து விட்டது. ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் சாய ஆலைகளை நடத்த விடாமல் சீல் வைப்பதுதான். சாயப்பட்டறைகளுக்கு சீல் வைப்பதை கைவிட்டு விட்டு அதற்கு மாற்றுவழி என்ன? என்பதை அரசு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சாயப்பட்டறைகளுக்கு சீல் வைப்பதை கைவிட வேண்டும். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளுக்குள் சென்று ஆய்வு செய்வதை நிறுத்திவிட்டு உணவு பொருளில் கலப்படம் இருந்தால் அதை தயாரிக்கும் நிறுவனத்தில் சோதனை செய்து அங்கேயே தடுத்து நிறுத்த வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக டெல்லியில் மத்திய நிதியமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். ஈரோடு பகுதியை பொருத்தவரை ஊராட்சிக்கோட்டை குடிநீர், பாதாள சாக்கடை திட்டம், புதைவழி கேபிள் திட்டம் போன்ற திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதனால் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இதை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விக்கிரமராஜா பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் தேவராஜா, மாவட்ட பொருளாளர் ராஜகோபால், மாவட்ட துணை தலைவர் உதயம் செல்வம், கருங்கல்பாளையம் பகுதி தலைவர் ராமச்சந்திரன், மாநகர செயலாளர் அந்தோனியூஜின், பவானி வட்டார பேரமைப்பு செயலாளர் காதர்அலி (எ) பாபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : sealing ,
× RELATED அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகம் சீல் வைப்பு