×

ஆற்றில் மண் அரிப்பால் திக்குறிச்சி மகாதேவர் கோயில் சுற்றுச்சுவர் பாதிப்பு அதிகாரிகள் கவனிப்பார்களா?

மார்த்தாண்டம், நவ. 26:  திக்குறிச்சி மகாதேவர் கோயில் சுற்றுச்சுவர், மண் அரிப்பால் இடியும் நிலையில் உள்ளது. இதனை அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். குமரியில் வரலாற்று சிறப்புமிக்க மகா சிவாலய ஓட்டத்துடன் தொடர்புடைய 12 சிவாலயங்களில் 2வது கோயில் திக்குறிச்சி மகாதேவர் கோயில். இங்கு நந்தி சிலை, மேற்கூரை, பகவதி கோயில், சுற்றுச்சுவர் அமைத்து, விமான பணிகள் செய்து பக்தர்கள் முயற்சியால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் தினமும் கேரளா, தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். பிரதோஷம், மாத சிவராத்திரி, திருவாதிரை, பவுர்ணமி, அமாவாசை, திருவாதிரை திருவிழா போன்ற விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், மகா சிவராத்திரி போன்ற தினங்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து மகாதேவரை வழிபட்டு செல்கின்றனர்.

இந்த கோயில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கோயிலின் முன் பக்கத்தில் பயணம் - திக்குறிச்சி - வள்ளக்கடவு இணைப்பு பாலம் கட்டப்பட்டது. அதன் பிறகு ஆற்றின் திசை மாறி கோயிலின் காம்பவுண்ட் சுவரில் தண்ணீர் நேரடியாக மோதி வருகிறது. இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. சுவர் முழுவதும் ஆற்றில் அடித்து செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி இடிந்தால் கோயிலும் சேதமடையும் அபாயம் உள்ளது. காம்பவுண்ட் அருகே பக்கச்சுவர் கட்ட பக்தர்கள் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கை இல்லை. வரும் ஜனவரி மாதம் 2ம் தேதி இந்த கோயிலில் திருவாதிரை திருவிழா நடக்க உள்ளது. ேமலும் பிப்ரவரி மாதம் லட்சம் பேர் கலந்து கொள்ளும் மகா சிவராத்திரி திருவிழா நடக்கிறது. எனவே வரலாற்று சிறப்புமிக்க பொக்கிஷமான கோயிலை பாதுகாக்கவும், பக்தர்கள் பாதுகாப்பு கருதியும் உடனடியாக பக்கச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : river ,Dikkurichi Mahadevar ,erosion ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை