×

உதயமார்த்தாண்டபுரத்தில் பாசன வாய்க்காலில் தேங்கிய கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

முத்துப்பேட்டை, நவ.26: உதயமார்த்தாண்டபுரத்தில் பாசன வாய்க்காலில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் தொற்று நோய்பரவும் அவலம் உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி பராமரிப்பில் சுமார் 46 குளங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான குளங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. சில குளங்கள் மாயமாகி விட்டன. இதில் பிரதான குளமான செட்டிக்குளம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய குளமாகும். கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த குளத்தின் அருகே ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளது. சாலையை ஒட்டி இந்த குளம் அமைந்திருப்பதால் ஒரு காலத்தில் இந்த குளத்தில் தான் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த கிராம மக்கள் மகிழ்ச்சியாக குளிப்பதற்காகவே வருவது வழக்கம்.

மேலும் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குடிநீருக்காவும் பயன்படுத்தி வந்தனர். சுமார் 100 மீட்டர் தூரத்தில் எந்த பகுதியில் நின்று பார்த்தாலும் குளத்தின் அழகை இந்த கிராம மக்கள் ரசித்து பார்த்து வந்த நிலையில் இன்று ஒரு அடி தூரத்தில் நின்றால் கூட குளத்தைப் பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு குளத்தைச் சுற்றிலும் தனியாரால் ஆக்கிரமிக்கபட்டு கடைகள் குடியிருப்புகள் என சூழ்ந்து உள்ளது.அதேபோல் செட்டிக்குளத்திற்கு நீராதாரத்தை பெற்று தரும் பிரதான பாசன வாய்க்காலான வடிவாய்க்கால் தேவதானம் கோரையாற்றில் பிரிந்து உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தை கடந்து செட்டிக்குளத்திற்கு வந்து மெயின் ரோட்டை கடந்து கிளந்தாங்கி ஆற்றில் வடிகிறது. இதிலும் தனியார்ஆக்கிரமிப்புகள் பெருகியதால் தண்ணீர் வரத்து தடைப்பட்டது. இந்த வாய்க்காலில் நெடுவேங்கும் கிடக்கும் கட்டிட கழிவுகளை அகற்றவேண்டும், அதேபோல் தேங்கிக்கிடக்கும் கழிவு நீரை வெளியேற்ற வேண்டும், அதனுடன் இந்த பாசன வாய்களை தூர்வாரி சுத்தம் செய்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி அலாவுதீன் கூறுகையில் கலெக்டர் இதனை நேரில் ஆய்வு செய்து இந்த வாய்க்காலை தூய்மை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.செல்லத்துரை கூறுகையில் இந்த பாசன வடிவாய்க்கால் தேவதானம் துவங்கி இப்பகுதி வந்து கோபாலசமுத்திரம் சென்று வடிகிறது. இதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் சாகுபடிக்கு இதிலிருந்து வரும் தண்ணீர; பயன்பட்டு வந்தது. அதேபோல் இந்த பாசன வடிவாய்க்கால் மூலம் இப்பகுதியில் உள்ள உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் ஏரி, சித்தேரிகுளம், வடக்கு சித்தேரிகுளம், பள்ளி குளம் ஆகியவை நிரம்பி இப்பகுதிக்கு மிகப்பெரிய நீராதாரத்தையும் பெற்று தந்தது. இதில் சென்றாண்டு இப்பகுதியில் ஆக்கிரமிப்பு எடுத்த நாளிலிருந்து இந்த பாசன வாய்க்காலில் தண்ணீர் வரத்து தடைப்பட்டு தற்பொழுது கழிவுநீர் வாய்க்காலாக மாறிவிட்டது. எந்த நோக்கத்திற்கு இந்த ஆக்கிரமிப்பு எடுக்கப்பட்டதோ, அவைகள் நிறைவேறவில்லை.சுகாதார சீரழிவு ஏற்பட்டு பலருக்கு பல வியாதிகள் பரவி வருகிறது. இப்பகுதி மக்கள் நலன் கருதி இந்த வாய்க்காலில் உள்ள கழிவுகளை அகற்றி பாசன வாய்க்காலைசரி செய்து தரவேண்டும் என்றார்.

Tags : spread ,Udayamartandapuram ,
× RELATED மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு...