×

தோகைமலை பகுதி சிவன் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை, வழிபாடு

தோகைமலை, நவ. 22: தோகைமலை பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் நடந்த கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்டிமலையில் உள்ள விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகியம்மன் கோயிலில் நடந்த கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிசேகம் நடந்தது. பின்னர் காலபைரவருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து வடை மாலை அணிவித்து தேங்காய், பூசணிக்காய் விளக்கு ஏற்றி குடும்பங்களில் வறுமை நீங்கி செல்வ செழிப்புடன் மகழ்ச்சியுடன் வாழவும், தொழில் சிறக்கவும், வியாபாரங்கள் பெருகவும், இரவு நேர பயணங்கள் பயமின்றி இருக்கவும், வாகனங்கள், கால்நடைகள் வளர்ப்பு உட்பட குடும்பங்கள் சிறந்து விளங்கவும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜையில் பக்தர்கள் காலபைரவரை வழிபட்டனர்.

பின்னர் பக்தர்களுக்கு தயிர், எலுமிச்சை உள்பட பல்வேறு சாதங்கள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜையினை கோயில் அர்ச்சகர் கந்தசுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் வேதரத்தினம் சிவம் ஆகியோர் நடத்தினர். இதில் ஆர்.டி.மலை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவரை தரிசனம் செய்தனர். இதேபோல் சின்னரெட்டியபட்டியில் உள்ள ஆவுடைலிங்கேஸ்வரர் மற்றும் தோகைமலையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், டி.இடையபட்டி ரெத்தினகிரீஸ்வரர் கோயில்களிலும் நடந்த கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Tags : Deviprayam Ashtami Special Pooja and Worship ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...