×

குடியிருப்பு நடுவே தேங்கி நிற்கும் கழிவுநீர் ஜெ.ஜெ.காலனியில் 40 பேருக்கு மர்மக்காய்ச்சல்

ராஜபாளையம், நவ.22:  ராஜபாளையம் அருகே ஜெ.ஜெ. காலனியில் சுகாதார சீர்கேடுகளால் சிறுவர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர். சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் அடுத்து ஜெ.ஜெ.காலனி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 85 குடும்பங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலும் விவசாயம், பட்டாசு, தீப்பெட்டி, நூற்பாலைகளில் தினக் கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேற முறையான வடிகால் வசதி இல்லை. வடிகால் வசதி செய்து தரக் கோரி பல முறை பொது மக்கள் ஊராட்சி மன்ற அதிகாரிகளிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பல மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை வடிகால் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வடிகால் இல்லாத காரணத்தால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீருடன், மழை நீரும் கலந்து தெருக்களின் பல இடங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது.
இப்பகுதியை சேர்ந்த முத்துமாரி கூறும்போது, குடிநீர் பிடிக்கும் இடத்தை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி உள்ளது. குடிநீரிலும் கழிவு கலந்து உடல் உபாதைகளை ஏற்டுத்துகிறது. இதனால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் கடந்த 20 தினங்களுக்கு முன்னதாக இப்பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழந்துள்ளார். மேலும் கழிவு நீரிலும், தேங்கி உள்ள சுத்தமான மழை நீரிலும் பல்வேறு கொசுப் புழுக்கள் உருவாகி, தற்போது இங்குள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு பலவிதமான மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி 40க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். எனவே அடுத்த உயிரிழப்பு ஏற்படும் முன்னதாக எங்கள் பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து திருவில்லிபுத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் சபரீஸ்பிரபுவிடம் கேட்ட போது, கொசுப்புழுக்களை ஒழிக்க மருந்து தெளிக்கவும், கொசுக்களை ஒழிக்க கொசு புகை அடிக்கவும், காய்ச்சல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தி நோயை குணப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Tags :
× RELATED பணம் திருடியவர் கைது