×

தேவாரம் பகுதியில் உழவர் அட்டை நிறுத்தம் விவசாயிகள் கவலை

தேவாரம், நவ.22: தேவாரம் பகுதிகளில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்ட அடையாள  அட்டை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
உத்தமபாளையம் தாலுகாவில் கம்பம், சின்னமனூர், கூடலூர், உள்ளிட்ட நகராட்சிகள், ஓடைப்பட்டி, மார்க்கயன்கோட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள், 30க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு வசிக்கும் விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முன்பு உழவர் அட்டைகள் வழங்கப்பட்டன. 2.5 ஏக்கருக்கு குறைவாக உள்ள நன்செய்நிலங்கள், 5 ஏக்கருக்கு மிகாமல் உள்ள புன்செய் நிலங்கள் வைத்துள்ள விவசாயிகள் மற்றும் தினந்தோறும் வேலைகளுக்கு செல்லும் விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் விபத்துக்களில் இறந்தாலோ, பாம்பு கடி ஏற்பட்டு மரணம் அடைந்தாலோ ரூ.1லட்சம் இழப்பீடு வழங்கப்படும். 65 வயதைக் கடந்தால் மாதம் ரூ.1000 மற்றும் படிக்கின்ற குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை, பெண்கள் திருமணத்திற்கு ரூ.10ஆயிரம், ஆண்களுக்கு 8 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும். எனவே, உழவர் அட்டை கேட்டு பொதுமக்கள் அதிகளவில் விண்ணப்ப மனுக்களை தருகின்றனர். இதனை விசாரித்து நடவடிக்கை எடுத்து தேவையான உழவர் அட்டைகளை  தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக அரசால் தரப்படும் சலுகைகள்  விவசாயிகளை சென்றடையாது. எனவே, நிறுத்தப்பட்ட உழவர் அட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து விவசாய தொழிலாளர்கள் கூறுகையில்,  ``உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய அடையாள அட்டைகள் தேவாரம் பகுதிகளில் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. இதன் மனுக்கள் விசாரிக்கப்படாமலேயே நிலுவையில் உள்ளது. எனவே, இவற்றை விசாரித்து உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...