×

போடியில் குப்பை கொட்டுமிடமான மலைவாழ் மக்கள் குடியிருப்பு தொற்று நோயால் பலர் பாதிப்பு

போடி, நவ. 22: போடி நகராட்சி குப்பைகளை மலைவாழ் மக்கள் வாழும் சிறைகாடு பகுதியில் கொட்டப்படுகிறது. இதனால் தொற்றுநோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
  போடி அருகே அகமலை சாலையில் 8 வது கிலோ மீட்டரில் சிறைகாடு உள்ளது. இங்கு 2010ம் ஆண்டு மலைவாழ் மக்களுக்கு 30 தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன. இவற்றில் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இம்மக்கள் விவசாயக்கூலி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
போடி முதல்நிலை நகராட்சியில் 33 வார்டுகளில் சேரும் குப்பைக்கழிவுகள் போடி மயானச்சாலையில் உள்ள குப்பைக்கிடங்கில் சேர்க்கப்பட்டு வந்தது. போடியில் பாதாளச்சாக்கடை திட்டம் கொண்டு வந்ததால் கழிவுநீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கு கழிவுநீர் நிலையம் கட்டப்பட்டது.
இதனால்  குப்பைக்கழிவுகளை மயானச்சாலையில் கொட்டுவதற்கு இடம் இல்லாமல் போனது. இதனால் சிறைகாடு ஒருபகுதியில் நகராட்சி குப்பைக்கிடங்காக மாற்றப்பட்டது.
இதனால் போடியில் சேரும் ஒட்டு மொத்த  குப்பைக்கழிவுகளை சிறைகாடு பகுதியில் கொட்டி குவித்து வருகின்றனர். இதன் அருகில் தான் சிறைகாடு மலைவாழ் மக்கள் வசிக்கும் தொகுப்பு வீடுகள் உள்ளன.
குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டி குவிக்கப்பட்டு வருவதால், அங்கு உற்பத்தியாகும் ஈக்கள் மற்றும் கொசுக்கள் கூட்டம், கூட்டமாக சிறைகாடு குடியிருப்பு பகுதியை முற்றுகையிடுகின்றன. அவர்கள் சமைக்கும் உணவில் கூட்டம், கூட்டமாக ஈக்கள் அமருவதால், அதை சாப்பிட முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் இங்கு உற்பத்தியாகும் கொசுக்களால் சிறைகாடு மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, தேனி மாவட்டத்தில் பல பகுதிகளில் டெங்கு அபாயம் உள்ளதால், தங்கள் பகுதியிலும் பரவும் என்ற பீதி சிறைகாடு மக்கள் மத்தியில் உள்ளது.
 சிறைகாடு மக்களுக்கு குடிநீர், மின்சாரம், சாலை வசதி, மருத்துவ வசதி, கழிப்பிட வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் ரேஷன் உள்ளிட்ட பொருட்கள் வாங்கவும், வீட்டிற்குத் தேவையான மையல் பொருட்கள் வாங்கவும் 8 கி.மீ தொலைவிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அத்துடன் மருத்துவ சிகிச்சை பெற  போடி அரசு மருத்துவமனைக்கு நடந்தே வந்து சிகிச்சை பெறும் நிலைக்கு சிறைகாடு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, உடனடியாக நகராட்சி குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று மலைவாழ் மக்கள் வலியுறுத்துகின்றனர். அத்துடன் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bodhi ,areas ,
× RELATED மாவட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கை தேவை